வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி| Dinamalar

மும்பை,-ரிசர்வ் வங்கி, அதன் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, நேற்று 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நிபுணர்கள் 35 புள்ளிகள் அதிகரிக்கக்கூடும் என கணித்திருந்த நிலையில், அதற்கு மேலாக வட்டியை உயர்த்தி உள்ளது.ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் துவங்கி, மூன்றாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, தற்போதைய வட்டி விகிதம் 5.40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதற்கு முன், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்டில், வட்டி விகிதம் இதே 5.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியும் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான பணக் கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும், ஒரு மனதாக இந்த வட்டி உயர்வு குறித்த முடிவை எடுத்துள்ளனர்.

முக்கிய அம்சங்கள்

 ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, வட்டி விகிதம் 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை, 140 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருக்கும்  முதல் காலாண்டில் வளர்ச்சி 16.2 சதவீதமாகவும்; இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாகவும்; மூன்றாவது காலாண்டில் 4.1 சதவீதமாகவும்; நான்காவது காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்  சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் பணவீக்கம், இரண்டாவது காலாண்டில் 7.1 சதவீதமாகவும்; அடுத்து வரும் காலாண்டுகளில் 6.4 மற்றும் 5.8 சதவீதமாகவும் இருக்கும் நாட்டின் நிதித் துறை மிகவும் வலுவாக உள்ளது

 இந்திய பொருளாதார அடிப்படையின் பலகீனத்தை விட, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பால், ரூபாய் மதிப்பு சரிந்து உள்ளது ரூபாய் மதிப்பு சரியாமல் இருக்க, ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அன்னிய செலாவணி கையிருப்பில், உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்கள், ‘பாரத் பில் பேமென்ட் சிஸ்ட’த்தை பயன்படுத்தி, இந்தியாவில் இருக்கும் அவர்களின் குடும்பத்துக்கான கல்வி உள்ளிட்ட செலவுகளை செய்து கொள்ள, வசதி ஏற்படுத்தி தரப்படும் அடுத்த பணக் கொள்கை கூட்டம், செப்டம்பர் 28 – 30ம் தேதிகளில் நடைபெறும்.கொந்தளிக்கும் பெருங்கடலின் மத்தியில், ஒரு தீவை போல, இந்திய பொருளாதாரமானது, நிதி ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
சக்திகாந்த தாஸ், கவர்னர், ரிசர்வ் வங்கி

வீடுகள் விற்பனை பாதிக்கும்

ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்ததை அடுத்து, வீடுகள் விற்பனை பாதிக்கப்படும் என அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். வட்டி உயர்வு குறித்து துறையினர் கூறியிருப்பதாவது:அனுஜ் பூரி, தலைவர், அனராக்: ஏற்கனவே சிமென்ட், உருக்கு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு விலை உயர்ந்துள்ளது. இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரித்துள்ளதால், விற்பனையில் குறிப்பிட்ட அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.ரமேஷ் நாயர், தலைமை செயல் அதிகாரி, கோலியர்ஸ்இந்தியா: சகாய விலை வீடுகள் மற்றும் மத்திய தர வீடுகள் விற்பனை பாதிக்கப்படும். ஆடம்பர வீடுகள் பிரிவில் அதிகம் பாதிப்புகள் இருக்காது.ஷிஷிர் பைஜால், தலைவர், நைட் பிராங்க்: இதுவரை அதிகரித்துள்ள வட்டியின் அடிப்படையில் பார்த்தால், வாடிக்கையாளரின் வீடு வாங்கும் சக்தி 11 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 1கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கும் சக்தி கொண்டவரால் இப்போது, 89 லட்சம் ரூபாய்க்கு தான் வாங்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.