பிரீமியர் லீக் Week – 1 | டிரா செய்த லிவர்பூல், தோல்வியுடன் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடட்!

கிளப் கால்பந்து சீசன் தொடங்கிவிட்டது. பிரீமியர் லீக், லீக் 1, புண்டஸ்லிகா, லிகா போர்ச்சுகல் என ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து தொடர்கள் இந்த வாரம் தொடங்கிவிட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றே சில சுவாரஸ்யமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஃபுல்ஹாம் அணிக்கு எதிராக லிவர்பூல் டிரா செய்ய, எரிக் டென் ஹாக் தலைமையிலான மான்செஸ்டர் யுனைடட் அணியின் புதிய பயணம் தோல்வியோடு தொடங்கியிருக்கிறது.

பிரீமியர் லீக் | Premier League

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது ஆர்செனல். செல்ஹுர்ஸ்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்தியது அந்த அணி. மைக்கேல் ஆர்டேடா அணியில் பல்வேறு அப்டேட்களைச் செய்தது, அந்த அணியைப் பல மடங்கு பலப்படுத்தியிருந்தது. கேப்ரியல் ஜீசுஸ், ஜின்சென்கோ என மான்செஸ்டர் சிட்டி அணியிடம் இருந்து வாங்கப்பட்ட வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். மூன்றாவது நிமிடத்திலேயே இந்த சீசனின் முதல் கோல் அடித்திருக்கப்படவேண்டும். கேப்ரியல் ஜீசுஸ் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை கேப்ரியல் மார்டினெல்லியால் கோலாக்க முடியவில்லை. இருந்தாலும் 20வது நிமிடத்தில் அவரே இந்த சீசனின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

இரண்டாவது போஸ்ட்டுக்கு வெளியே வந்த கார்னரை பெனால்டி ஏரியாவுக்குள் ஜின்சென்கோ ஹெட்டர் செய்ய, அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் மார்டினெல்லி. அதன்பிறகு நிறைய வாய்ப்புகளை உருவாக்கியிருந்தாலும் ஆர்செனல் அணியால் கோலடிக்க முடியவில்லை. 85வது நிமிடத்தில் புகாயோ சகா அடித்த ஷாட்டை கிளியர் செய்ய நினைத்த கிறிஸ்டல் பேலஸ் கேப்டன் மார்க் கூஹி தன் நெட்டுக்குள்ளேயே அதை அனுப்பி ஆர்செனல் அணிக்கு 2 கோல் முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்திருந்தாலும் பேட்ரிக் வியெராவின் அணியால் ராம்ஸ்டேலை மீறி கோலடிக்க முடியவில்லை. அதனால் போட்டி 0-2 என முடிவுக்கு வந்தது.

பிரீமியர் லீக் | Premier League

சனிக்கிழமை மாலை நடந்த முதல் போட்டி அனைத்து பிரீமியர் லீக் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக லிவர்பூல் ரசிகர்களுக்கு! ஃபுல்ஹாம் அணிக்கு எதிராக நடந்த போட்டியை லிவர்பூல் எளிதாக வெற்றி பெறும் என்று நினைத்திருந்த நிலையில் அந்த ஆட்டம் 2-2 என முடிவுக்கு வந்தது. பெரும்பாலான நேரம் லிவர்பூல் அணி தோல்வியைத் தவிர்க்கவே போராட வேண்டியதாக இருந்தது.

கடந்த சாம்பியன்ஷிப் சீசனில் கோல் மழை பொழிந்த அலெக்சாண்டர் மிட்ரோவிச் லிவர்பூல் அணிக்கு பெரும் தலைவலியாக விளங்கினார். 32வது நிமிடத்தில் தன் டிரேட் மார்க் ஹெட்டர் மூலம் ஃபுல்ஹாம் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் அவர். அதிலிருந்து மீண்டும் லிவர்பூல் அணியால் உடனடியாக கோலடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் டார்வின் நுன்யஸ் களமிறங்கிய பிற்கு லிவர்பூல் அணிக்குப் பலன் கிடைத்தது. சலா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை 64வது நிமிடத்தில் கோலாக்கி போட்டியைச் சமனாக்கினார் அவர். ஆனால் 8 நிமிடங்களில் ஃபுல்ஹாம் அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

பிரீமியர் லீக் | Premier League

மிட்ரோவிச்சை ஃபவுல் செய்து அந்த அணிக்கு பெனால்டியை ஏற்படுத்திக் கொடுத்தர் விர்ஜில் வேன் டைக். அதைக் கோலாக்கி தன் கணக்கை இரட்டிப்பாக்கினார் மிட்ரோவிச். மீண்டும் அதே 8 நிமிட இடைவெளியில் லிவர்பூல் கோலடித்து ஆட்டத்தைச் சமனாக்கியது. இம்முறை நுன்யஸ் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை சலா கோலாக்கினார். இறுதியில் 2-2 எனப் போட்டி முடிய, புரமோட் ஆன ஒரு அணியோடு டிரா செய்து இந்த சீசனை தொடங்கியது ஜார்ஜன் கிளாப்பின் அணி.

முதல் வாரத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான், மான்செஸ்டர் யுனைடட் அணிகள் மோதிய போட்டிதான். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில், புதிய பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தலைமையில் புதிய சீசன் சிறப்பாகத் தொடங்கும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 1-2 எனத் தோல்வியடைந்திருக்கிறது யுனைடட்.

பிரீமியர் லீக் | Premier League

இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பெஞ்சில் இருந்தே தொடங்கினார் டென் ஹாக். அவர் வேலையை எரிக்சனால் செய்ய முடியும் என்றும், யுனைடட் அணியின் அட்டாக் ரொனால்டோ இல்லாமலும் சிறப்பாகச் செயல்படும் என்றும் நம்பினார். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே யுனைடட் அணி வாய்ப்புகள் உருவாக்க முடியாமல் தடுமாறியது. அப்படியிருக்க, 9 நிமிட இடைவெளியில் 2 கோல்கள் அடித்து யுனைடட் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்தார் பிரைட்டன் வீரர் பேஸ்கல் கிராஸ்.

நடுகளத்தில் பந்தை மீட்டு பிரைட்டன் அணி இடது பக்கம் கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கியது. இடது விங்கில் இருந்து த்ரூ பால் கொடுத்து வெல்பெக்கை ரிலீஸ் செய்தார் டுரொஸார்ட். அந்தப் பந்தோடு பாக்சுக்குள் நுழைந்த வெல்பெக், பெனால்டி ஏரியாவுக்குப் பந்தை கிராஸ் செய்தார். நடுவே வந்த வீரர்களால் பந்தை எட்ட முடியாமல் போனாலும் வலது விங்கில் இருந்து வந்த கிராஸ் அதைக் கோலாக்கினார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து யுனைடட் ரசிகர்கள் மீள்வதற்குள்ளாகவே இரண்டாவது கோலையும் அடித்தார் கிராஸ். சாலி மார்ச் வலது விங்கில் இருந்து அடித்த ஷாட்டை யுனைடட் கோல்கீப்பர் டி கே தடுத்தார். ஆனால், பந்து ரீபௌண்ட் ஆகி இடது பக்கம் இருந்த கிராஸின் கால்களுக்குச் செல்ல, அதையும் கோலாக்கினார் அவர். இந்த கோல் ஒட்டுமொத்தமாக யுனைடட் அணியை உலுக்கியது.

பிரீமியர் லீக் | Premier League

கோல் வாங்கியதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகளை உருவாக்கவும் அந்த அணி தடுமாறியதால், 50வது நிமிடத்தில் ரொனால்டோவைக் களமிறக்கினார் டென் ஹாக். அவராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. 68வது நிமிடத்தில் ஓன் கோல் மூலமாக அந்த அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இறுதியில் 1-2 எனத் தோல்வியடைந்தது மான்செஸ்டர் யுனைடட்.

பிரீமியர் லீக் மேட்ச் டே 1 முடிவுகள்

கிறிஸ்டல் பேலஸ் 0 – 2 ஆர்செனல்

ஃபுல்ஹாம் 2 – 2 லிவர்பூல்

போர்ன்மௌத் 2 – 0 ஆஸ்டன் விலா

லீட்ஸ் யுனைடட் 2 – 1 வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்

நியூகாசில் யுனைடட் 2 – 0 நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 4 – 1 சௌதாம்ப்டன்

எவர்டன் 0 – 1 செல்சீ

லெஸ்டர் சிட்டி 2 – 2 பிரென்ட்ஃபோர்ட்

மான்செஸ்டர் யுனைடட் 1 – 2 பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்

வெஸ்ட் ஹாம் யுனைடட் 0 – 2 மான்செஸ்டர் சிட்டி

புண்டஸ்லிகா (Bundesliga) மற்றும் லீக் 1 (Ligue 1)

2022-23 புண்டஸ்லிகா சீசனைப் படு பயங்கரமாகத் தொடங்கியிருக்கிறது பேயர்ன் மூனிச். எய்ன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் அணிக்கு எதிராக விளையாடிய அந்த அணி 6-1 எனப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணிக்காகத் தன் முதல் போட்டியில் விளையாடிய முன்னாள் லிவர்பூல் வீரர் சாடியோ மனே 29வது நிமிடத்திலேயே தன் கோல் கணக்கைத் தொடங்கினார். ஜோஷுவா கிம்மிக், பெஞ்சமின் பவார்ட், செர்ஜ் கனேப்ரி ஆகியோரும் கோலடிக்க, இளம் வீரர் ஜமால் மூசியாலா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

புண்டஸ்லிகா (Bundesliga)

அந்த அணியைப் போலவே கோல் மழை பொழிந்து லீக் 1 சீசனைத் தொடங்கியிருக்கிறது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. புதிய பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியரின் கீழ் புதிய ஃபார்மேஷனுடன் விளையாடிய அந்த அணி 5-0 என கிளெர்மான்ட் ஃபூட் அணியை வீழ்த்தியது. கடந்த லீக் 1 சீசனில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் தடுமாறிய மெஸ்ஸி இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததோடு ஒரு அசிஸ்ட்டும் செய்தார். மற்றொரு நட்சத்திர வீரர் நெய்மார் 1 கோல் அடித்தார். அசிஸ்ட்களிலோ அவர் ஹாட்ரிக் அடித்தார். இளம் புயல் கிலியன் எம்பாப்பே காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.