China Spy Ship: இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலை தடுத்து நிறுத்துக!

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்திக் கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது. சீனாவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்க் -5, விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்தக் கப்பலின் மூலம் வான்வழி 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகமாக உளவு பார்க்க முடியும். ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகிற அணு ஆராய்ச்சி மையங்களை இந்தக் கப்பலின் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் கேரள, ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்டவற்றையும் உளவு பார்க்க முடியும்.

இந்துமாக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாக் நீரிணைக்கு அருகில் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் தென் எல்லையில், நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கின்ற அறைகூவல் ஆகும். சீனக் கப்பல் அங்கு நிறுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வந்தபோதே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கடும் கண்டனங்கள் எழுந்தன. மாநிலங்களவையில், ஆகஸ்டு 3 ஆம் தேதி தேதி பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்.

“சீனாவின் உளவுக் கப்பல் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் போர்க்கப்பல் ஆகும். இப்போர்க் கப்பலின் வருகை நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இலங்கையின் பொருளாதார பேரழிவைச் சமாளிக்க இந்தியா 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி உதவி செய்துள்ள போதும், இலங்கை அரசு, இந்தியா கவலை கொள்ளும் செயலில் ஈபட்டிருக்கிறது.

சீனா உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்” என்று நான் வலியுறுத்தினேன்.

ஆனால், தற்போது இலங்கை வெளியுறவுத் அமைச்சகம், சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 ஆம் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக இந்தியா தீவிரம் கவனம் செலுத்தி சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.