எதையும் சந்திக்க இந்தியா தயார் நிலை| Dinamalar

”இந்தியாவை கண்காணிக்க சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பல், இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்த கப்பலை எதிர்கொள்ள, இந்தியாவும் முழு தகுதியுடன் உள்ளது,” என முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் கூறினார்.

நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:வல்லரசு நாடான சீனா, ‘பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி’ என்ற கடற்படையை அமைத்துள்ளது, ‘ஸ்ட்ரேட்டஜிக் சப்போர்ட் போர்ஸ்’ என்ற ஒரு பிரிவு, அதில் உண்டு. அதில், ஏராளமான போர் கப்பல்கள் உள்ளன.

வான்வெளி யுத்தம்

அவற்றில் மிக நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது தான், ‘யுவான் வாங்- 5’ ரக கப்பல். இதை 2007 செப்டம்பரில் தான் சீனா முதன்முதலில் வடிவமைத்தது.உளவு பணிக்காக உருவான இந்த கப்பல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. அத்துடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்
பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது. இது, சீனாவின் மூன்றாவது தலைமுறை கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுகிறது. நவீன உலகில் வான்வெளி யுத்தம் அதிகமாகி உள்ளது.

அதேபோல, ‘சைபர் அட்டாக்’ மற்றும் மின்னணு கருவிகளால் தொடுக்கப்படும் யுத்தம் என எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, ‘யுவான் வாங் 5’ கப்பலில் நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளதால், கடற்படையின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. அதிகளவில் கடல் எல்லைகள்; வலிமையான கடற்படையை கொண்ட பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலும், ‘யுவான் வாங்- 5’ போன்ற அதிநவீன போர் கப்பல்கள் உள்ளன.இந்தியாவின், ‘ஐ.என்.எஸ்., துருவ்’ கப்பல், ‘யுவான் வாங் 5’ போன்றது தான். 222 மீட்டர் நீளம்,
25 மீட்டர் அகலம் கொண்ட ‘யுவான் வாங் 5’ கப்பல், சீன தலைநகர் பீஜிங்கில் இருக்கும் தலைமை கடற்படை மையத்துக்கு, தான் சேகரிக்கும் அனைத்து உளவு தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பி வைக்கும். மேலும், 11 ஆயிரம் டன் எடையை தாங்கும் சக்தி உள்ள இந்த கப்பல், 750 கி.மீ., சுற்றளவில் உள்ள எந்த பொருளையும் துல்லியமாக படம் பிடிக்கும். அத்துடன் அதன் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்க வல்லது.அந்த பொருளை தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. ‘லான் மார்ச் -5’ என்ற ராக்கெட்டை, ‘யுவான் யாங் 5’ கப்பலில் இருந்து ஏவ முடியும்.

பசிபிக், அட்லான்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில், பல ஆண்டுகளாக கண்காணிப்பு பணிகளை, சீனாவின் ‘யுவான் வாங் – 5’ கப்பல்கள் செய்து வருகின்றன. இந்த கடல் பகுதிகள் வழியாக செல்லும் பயணியர் கப்பல், சரக்கு கப்பல்களை, உலக அளவில் பின்பற்றப்படும் ஒப்பந்தங்களை மீறி, சீனா கண்காணிக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளை கடந்து, பாகிஸ்தான் சென்ற, யுவான் வாங் -5 கப்பல், இலங்கையின் ஹம்பன்தோட்டா பகுதிக்கு வந்திருப்பது, இந்தியாவின் தென் பிராந்தியத்தில் உள்ள தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் கடலோர பகுதிகளை கண்காணிக்க தான்.

இலங்கையின் ஹம்பன்தோட்டாவில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்து, தமிழகம் 110 கி.மீ., துாரத்துக்குள் தான் இருக்கும். அதனால், தமிழகத்தை மிக எளிதாக அந்த கப்பல் கண்காணிக்கும். தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கொச்சியில் உள்ள தென் பிராந்திய கடற்படை தலைமையகம் மற்றும் ஆந்திரா, தமிழகத்தில் இருக்கும் அனைத்து துறைமுகங்களையும் சீன கப்பல் கண்காணித்து, தகவல் திரட்டி தன் தலைமையத்துக்கு தெரிவிக்கும். சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய கடற்படை வாயிலாக, அனைத்து விதமான தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு
விட்டன.

நடவடிக்கை

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ‘குவாட்’ நாடுகளின் கூட்டமைப்பு, சீனாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளது. இந்திய ரகசியங்கள் எதுவும் சீனாவுக்கு போகாத வகையிலான எல்லா நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்துள்ளது. அதையும் மீறி சீனா வாலாட்டினால், ‘யுவான் வாங் 5’ கப்பலை தகர்க்கும் சக்தியும், திறனும் இந்தியாவுக்கு உண்டு. இவ்வாறு மதன்குமார் கூறினார்.– நமது நிருபர் —

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.