கேட்பாரற்று இருக்கும் தேசியக் கொடிகள்: கண்ணியமாக இறக்க நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி? 

சென்னை: 75வது சுதந்திர தின நிறைவு தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகள், தெருக்களில் ஏற்ப்பட்ட தேசியக் கொடிகள் தற்போது கேட்பாரற்று உள்ளது. இந்தக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆக.13 முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதன்படி சென்னையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ” இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13 முதல் 15 வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக் கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், சென்னை மாநகராட்சி சார்பில் 02.08.2022 அன்று வணிகர் நலச் சங்கங்களுடன் கூட்டம் நடத்தி 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றுவது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி, 1 முதல் 15 மண்டலங்களின் மண்டல அலுவலர்கள், அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் வணிகர் நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் 03.08.2022 அன்று மண்டல அளவில் கூட்டம் நடத்தப்பட்டு 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண கொடி ஏற்றுவது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது.

எனவே, பொதுமக்கள் இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாகவும், தங்களின் தேசப்பற்று உணர்வை போற்று வகையிலும் தங்களது வீடு மற்றும் கடைகளில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தேசியக் கொடியினை ஏற்றி வைக்கவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னையில் அனைத்து வீடுகள், கடைகள், பொது இடங்கள் சாலைகள் என்று அனைத்து இடங்களிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிலையில் ஏற்றப்பட்ட கொடிகள் அனைத்தும் தற்போது சாலைகளில் கேட்பாரற்று உள்ளது. பல இடங்களில் தேசியக் கொடிகள் சேதம் அடையப்போகும் நிலையில் உள்ளது.

எனவே தேசியக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.