டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் அபாயகரமான நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) காற்றில் கலந்துள்ளன.

அதேபோன்று, ஷாங்காய், மாஸ்கோ நகரங்களில் காற்றில் அதிக அளவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு (என்ஓ2) கலந்துள்ளது. இந்த மாசு, மனிதர்களின் உயிருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். உலகளவில் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் பிஎம் 2.5 மற்றும் என்ஓ2 ஆகிய இரண்டு தீங்கு விளைவிக்கும் மாசுகள்தான் காற்றில் அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 7,239 நகரங்களில் ஏற்பட்ட 17 லட்சம் மரணங்களுக்கு பிஎம் 2.5 மாசு அடிப்படை காரணமாக இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, கொல்கத்தா, கனோ (நைஜீரியா), லிமா (பெரு), டாக்கா (வங்கதேசம்), ஜகர்தா (இந்தோனேசியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா) மற்றும் அக்ரா (கானா) ஆகிய நகரங்கள் உள்ளன.

அதேபோன்று, என்ஓ2 அதிகம் காற்றில் கலந்து பாதிக்கப்பட்ட நகரங்களில் உலகளவில் ஷாங்காய், மாஸ்கோ, டெஹ்ரான் (ஈரான்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா), பெய்ஜிங் (சீனா), கெய்ரோ (எகிப்து), அஸ்கபத் (துர்க்மெனிஸ்தான்), மின்ஸ்க் (பெலாரஸ்), இஸ்தான்புல் (துருக்கி), ஹோ சி மின் சிட்டி (வியட்நாம்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.