கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் – சேவாக் ஓபன் டாக்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த வீரேந்திர சேவாக், சர்வதேச அளவில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய டெல்லி நட்சத்திரம், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல போட்டிகளில் பந்துகளை பறக்கவிட்டார். ஒருநாள் மற்றும் டெஸ்ட், 20 ஓவர் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஜொலித்தார். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேவாக், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

விரைவில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அந்த போட்டிக்கு முன்னோட்டமாக சோயிப் அக்தருடன் இணைந்து ஸ்டார்ஸ்போர்ட்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, ஓபனிங் பேட்ஸ்மேனாக நீங்கள் களமிறங்கியது எப்படி? என்று கேட்க, அவரின் கேள்விக்கு சேவாக் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

“நான் கிரிக்கெட் வாழ்க்கையை மிடில் ஆர்டராக தான் தொடர்ந்தேன். 1999 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியபோதெல்லாம் மிடில் ஆர்டரில் விளையாடினேன். அதன்பிறகு, நான் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடியதற்கு ஜாகீர்கான் காரணம். அவர் சவுரவ் கங்குலியிடம் என்னை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குமாறு பரிந்துரைத்தார். அவர் கூறிய பிறகே என்னை சவுரவ் கங்குலி ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கினார்” எனத் தெரிவித்தார். 

ஆசியக்கோப்பை 20 ஓவர் தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்க இருக்கின்றன. 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்தப் போட்டி, 20 ஓவர் உலகக்கோப்பைக்கான தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்ளப்போகும் போட்டியாகவும் இது இருப்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.