’இணைந்து செயல்பட வாய்ப்பில்லை; ஓபிஎஸ் அழைப்பை ஏற்க முடியாது’ – இபிஎஸ் திட்டவட்டம்

சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு தீர்ப்பு தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

அதனை தடுக்கும் போது தான் சில பிரச்சினைகள் உருவாகின்றன. ஜெயலலிதா மறைவிற்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம். 2017 ல் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம். செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும்.

ஒருங்கிணைப்பாளர்களை தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில் விதி திருத்தப்பட்டது. ஆனால் அந்த விதிக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. பொதுக்குழு ஒப்புதல் கிடைக்காததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகின.

ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள். தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. இதனைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் பொதுக் குழு தொடர்பாக ஓபிஎஸ் காவல் துறைக்கு கடிதம் எழுதினார். இது எந்த வகையில் நியாயம். மேலும் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்.

ஓபிஎஸ் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைத்தான் அழைக்கிறா். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை. அவருக்கு உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும்.

11ம் தேதி பொதுக் குழுவிற்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. ஆனால் நீதிமன்றம் செல்கிறார். இவரே அதிமுக தலைமை அலுவலகத்தின் கேட்டை உடைத்து உள்ளே செல்கிறார். எல்லா அறையும் உடைக்கிறார். முக்கியமான பொருட்களைத் திருடிச் செல்கிறார். கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்?.எப்படி இணைய முடியும்? எந்த அடிப்படையில் இணைப்பு பற்றி பேசுகிறார்?.

ஒவ்வொரு முறையும் பிரச்சினை செய்துகொண்டே இருந்தார். இதன் காரணமாகத்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். கட்சிக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வந்தார். நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன்.கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.சட்டவிதிகளின்தான் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அவர் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். 15 நாட்கள் தொடர்ந்து அவருடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டது. அவர் எதுக்கும் ஒத்துவரவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்.,ஸுக்கு இருந்தால் அதை அவர் பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே” இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.