இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா?

டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசோ, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

நமது நாட்டு மக்கள் குடித்துவிட்டு மட்டையாகி விடுவார்கள் அல்லது அடுத்தவரிடம் சண்டை போட்டு மண்டையை உடைப்பார்கள். அதனால்தான், ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’, ‘குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலனை கெடுக்கும்’ என நமதுமக்கள் கூறி, மது அருந்துவதை தடுத்து வருகின்றனர். மேலும் அரசு விற்பனை செய்யும் மதுபான கடைகளையும் மூட வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பல நாடுகளில்  மது அருந்துவது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. சிலவகையான மது, உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், ஜப்பான்  அரசு தங்கள் நாட்டு இளைஞர்கள் அதிகம் மது அருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதோடு நாட்டில் மது நுகர்வை அதிகரிக்க தேசிய அளவிலான போட்டிகளையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா எனும் பெருந்தொற்று புரட்டிப்போட்டுள்ளது. இன்னும் பழைய நிலைமையை அடைய முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, உலக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன் நடைமுறை பழக்க வழக்கங்களும் மாறி உள்ளன. ஜப்பான் நாட்டில் ஏராளமானோர் குடிப்பழக்கத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மது விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து மது விற்பனையை பெருக்கவும், நாட்டின் இழந்த பொருளாதாரத்தை மீட்கவும், ஜப்பான் தேசிய வரி முகமை அமைப்பு, இளைஞர்களிடையே மீண்டும் மதுப்பழக்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றுகாரணமாக ஏராளமான இளைஞர்கள் மது அருந்தாமல் இருப்பதுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என தெரிந்து கொண்டதும், அதனை ஊக்குவிக்கும் வகையில், மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில்  ‘The Sake Viva’ என்ற ஒரு பிரசார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.

இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை விட குறைவாக மது அருந்துகிறார்கள் – இது சாக் (அரிசி ஒயின்) போன்ற பானங்களின் வரிகள் குறைந்துள்ளதாகவும், வரி உயர்வை பெருக்கும் நோக்கில், இளைஞர்களின் போக்கை மாற்றுவதற்கான யோசனைகளை கொண்டு வர தேசிய வரி நிறுவனம் ஒரு தேசிய போட்டியுடன் களமிறங்கியுள்ளது.

“சேக் விவா” பிரச்சாரம் குடிப்பழக்கத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான ஒரு திட்டத்தை கொண்டு வரும் என்று நம்புகிறது. இது தொழில்துறையை மேம்படுத்தும் என்றும் கூறி வருகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் விளம்பரங்கள், பிராண்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அதிநவீன திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அது விரும்புகிறது.

இதன் மூலம் 20 முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்கள் பீர், விஸ்கி மற்றும் ஒயின் போன்ற மதபான விற்பனைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் புரொபோசல் உடன் வருமாறு அழைப்பு கூட விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, மது விற்பனையை அதிகரிக்க புதிய ஐடியாக்கள் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 2020 நிதி ஆண்டில் ஜப்பான் அரசுக்கு கிடைத்த வரி வருவாயில் வெறும் 2 சதவீதம்தான் மது விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது. மது விற்பனை செய்ததற்கான வாரியாக வசூலானது மொத்தம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது. அந்த நாட்டுக்கு மது விற்பனை மூலம் கடந்த 2016 வாக்கில் கிடைத்த வரி வருவாயை காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு என சொல்லப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசின் இந்த முயற்சி கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அறிவிப்பு  கேலிக்குரியதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரம். மற்றபடி மக்களை அதிகளவு மது அருந்த சொல்லி வற்புறுத்தவில்லை என அந்த நாட்டு வரி முகமை விளக்கம் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.