கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ஸ்டாண்டிங் கமிட்டி: ‘டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம்’ – வானதி சீனிவாசன்

Coimbatore News in Tamil: கோவை ரயில் நிலையத்தை ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதன்பிறகான பேட்டியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘இந்த ஆய்வில் டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி-கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,க்கள் நேற்று கோவை வந்து இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களுக்காக ரயில்வே துறை அவர்களின் பொருட்களை மிக குறைந்த வாடகையில் இங்கு கடை போட்டு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக, தென் தமிழகத்திற்கு திருச்செந்தூர் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரயில்வே சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். வடகோவை ரயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்க வடகோவையில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது. அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

நமக்கு தேவைப்படக்கூடிய நிலம் கிடைத்தால் உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது. நான் இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன்.

இந்தக் குழுவில் டி.ஆர். பாலு உள்ளார். ஆனால் அவரை இங்கு பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா என தெரியவில்லை. இங்கு வந்துள்ள எம்பிக்கள் அனைவரும் ஒடிசா, ராஜஸ்தான் குஜராத் ,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது என தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.