பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு – முக்கிய ஆவணங்கள் மாயம்; ஓய்வு வழக்கறிஞர் விளக்கம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்போனது நீதிபதியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிறப்பு டிஜிபியாக இருந்தவர், கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்துள்ளார்.
காணாமல்போன ஆவணங்களின் மறு நகல் ஆவணங்களை வரும் 25-ம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆவணங்கள் காணாமல்போவது இது ஒன்றும் புதிதல்ல என்றும், இதற்கு முன்னர் பலமுறை நடந்துள்ளது எனவும், அப்படி ஆவணங்கள் காணாமல் போவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் மூத்த அரசு சிறப்பு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அதில், “அதிக அளவு வழக்குகள் உள்ளதால், வழக்கு ஆவணங்களின் பண்டல்கள் மாறிபோவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட ஒரு வழக்கில் அளவுக்கு அதிகமான ஆவணங்களை அந்த வழக்கு கட்டுக்குள் சேர்த்திருப்பதால், அவை அந்தக் கட்டுக்குள் இருந்து விலகி விடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் ஒரு நீதிமன்றத்தில் இருந்து வேறு ஒரு நீதிமன்றத்திற்கு ஆவணங்கள் மாற்றம் செய்கின்றபோது சில ஆவணங்கள் முதலில் வழக்கு தொடுக்கப்பட்ட நீதிமன்ற ஆவண அறைக்குள்ளேயே தங்கி விடுவதும் உண்டு. ஆனால் இந்த வழக்கில் அப்படி அல்ல. ஒரே நீதிமன்றத்தில் தான் தொடர்ந்து ஆவணங்கள் இருந்து வருகிறது.
image
எனவே ஆவணங்கள் பண்டல்களில் இருந்து நழுவி இருக்கலாம் அல்லது வேறு பண்டல்களுக்கு மாறி இருக்கலாம். இவை முழுவதும் டிஜிட்டல் ஆவணங்கள் என்பதால், அவற்றை மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆனால் உடைமைகளாக இருந்தால் அவற்றை கண்டுபிடிப்பது சிரமம். இதனால் வழக்கு சில நேரங்களில் வேறு திசையை நோக்கி சென்றுவிடும்.
சாதாரணமாக நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வழக்கு விபரங்களை எடுத்து விளக்குவதற்கும், வழங்குவதற்கும் ஒரு கிளர்க் பணியில் இருப்பார். அடுத்ததாக வழக்கு ஆவணங்களை எடுத்துச் செல்லுகிற உதவியாளர் ஒருவர் இருப்பார். பின்னர் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு ஆவண காப்பாளர் ஒருவர் இருப்பார். ஒரே நேரத்தில் பல வழக்கு ஆவணங்களை எடுத்து வருகிறபோது மாறி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் ஒவ்வொரு வழக்கு கோப்புகளாக தேட வேண்டி இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.