முதல்வரை விமர்சிக்கும் அரசு ஊழியர்களிடம் பணித்திறனை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா?

இனிப்பான செய்தி:
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கடந்த திங்கள்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்புமிக்க இந்த தினத்தில் சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுதாக அப்போது அறிவித்தார். அதாவது 31% ஆக இருக்கும் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படுவதாகவும், இது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானது என்றும் முதல்வர் சொன்னதுதான் தாமதம்..

முதல்வர் மீது விமர்சனம்:
DA உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறைதானே.. அதனை ஏன் முதல்வர் தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட வேண்டும்? இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பொதுமக்களின் வெறுப்பை அதிகரிக்கச் செய்வதுதானே நோக்கமாக இருக்கவேண்டுமேயன்றி வேறென்ன இருக்க முடியும்? என்று விமர்சனத்தை சில அரசு ஊழியர்கள் முதல்வர் மீது வைத்தனர்.

அத்துடன், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தான் DA உயர்வு கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களை விட அகவிலைப்படியில் ஆறு மாதம் பின்தங்கிய உயர்வு …. இது எப்படி இணையான அகவிலைப்படி உயர்வாக இருக்க முடியும்? என்று துணை கேள்வியை வேறு அரசுப் பணியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

கோபத்துக்கு காரணம்:
திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதில் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் மீது இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதற்காக சுதந்திர தின நன்னாளில் ஒரு முதல்வர் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி எழுப்புவது அரசு மீதான வெறுப்புணர்வின் உச்சக்ட்டம்.

இப்படியெல்லாம் கேள்வி எழுப்பும் அரசு ஊழியர்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப, ஆண்டுககு இருமுறை தங்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு போன்ற சலுகைகள் கார்ப்பரேட், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஊதிய உயர்வு வேறுபாடு:
2%, 3% என ஒற்றை இலக்க விகிதத்தில் அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது தங்களது அடிப்படை ஊதியத்தில்தான் (Basic Salary) கணக்கிடப்பட்டு தரப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் ஊதிய உயர்வே அவர்களின் மொத்த ஊதியத்தை (Gross Salary)அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த நுட்பமான வேறுபாட்டை கருத்தி்ல் கொள்ளாமல் DA உயர்வு, தீபாவளி, பொங்கல் போனஸ் அது இதுவென தங்களுக்கு எப்போது பார்த்தாலும் அரசு சலுகைகளை வாரி வழங்கி வருவதாக தவறான ஒரு கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கதான் செய்கிறது என தன்நிலை விளக்கம் அளிக்கின்றனர் அரசு ஊழியர்கள்.

பணித்திறன்:
சரி… இவ்வளவு பேசுகிறீர்களே…தனியார் நிறுவன பணியாளர்களை போன்று மாதந்திர டார்கெட், காலாண்டு, அரையாண்டு பணி மதிப்பீடு போன்ற பணித்திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும அரசுத் துறைகளில் கடைப்பிடிக்கப்படுகிறதா எனக் கேட்டால், அதற்கு அவர்களிடம் ஆக்கப்பூர்வமான பதில் இல்லை.

எனவே பழைய ஓய்வூதிய திட்டம், முன் தேதியிட்ட DA போன்றவற்றை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றுவதுதான், தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசுக்கு செய்யும் ஆகச்சிறந்த கைமாறாக இருக்க முடியும் என்பதே வெகுஜென மக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.