“3 ஆண்டுகளில் 7 கோடி ஊரக குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு” – ஜல் ஜீவன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைவரின் முயற்சி என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு குடிநீர் சான்றிதழ் பெற்ற மாநிலமாக கோவா மாறியுள்ளது. இந்த சாதனையை எட்டிய முதலாவது யூனி்யன் பிரதேசங்களாக தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டியூ மாறியிருப்பது பெருமைக்குரியது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவையாக மாறியிருப்பது சாதனை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன், திறந்தவெளியில் மலம் கழிக்காத நாடு என அறிவிக்கப்பட்ட பின், அடுத்த தீர்மானம் கிராமங்கள் பொதுக்கழிப்பிடங்களையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, கால்நடை கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றையும் கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நிறைவேற்றுவதில், குடிநீர் தட்டுப்பாடு மிகப்பெரிய தடையாக இருக்கும். குடிநீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக, மத்திய அரசு இடைவிடாது பணியாற்றி வருகிறது.

ஒரு நாட்டை கட்டமைக்க ஒருவர் பணியாற்றும் அளவுக்கு ஒரு அரசை அமைக்க ஒருவர் அவ்வளவு கடினமாக, பணி செய்ய வேண்டியிருக்காது என்பது தான் உண்மையாகும். நாட்டின் கட்டமைப்புக்கு நாம் அனைவரும், பணியாற்ற தீர்மானித்திருக்கிறோம். இதனால் தான், நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை நோக்கி நாம் பணியாற்றுகிறோம். நாட்டைப்பற்றிய அக்கறை இல்லாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் அல்லது எதிர்காலம் சீரழிக்கப்படுவதை பற்றியும் கவலைப்படாதவர்கள். இத்தகையவர்கள் நிச்சயம் பெரிதாக பேசுவார்கள். ஆனால் குடிநீருக்காக பெரிய தொலைநோக்குப் பார்வையோடு ஒரு போதும் பணிபுரிவதில்லை.

தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள், நதிகள் இணைப்பு மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற மழைநீரை சேமிக்கும் அடல் புஜால் திட்ட முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ராம்சர் சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அதில் 50 கடந்த 8 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டது. 7 கோடி கிராமப்புற குடும்பங்களை வெறும் 3 ஆண்டுகளில் குழாய் நீருடன் இணைக்கும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 7 தசாப்தங்களில் 3 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது.

நாட்டில் சுமார் 16 கோடி கிராமப்புற குடும்பங்கள் உள்ளன, அவர்கள் தண்ணீருக்காக வெளி ஆதாரங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படைத் தேவைக்காகப் போராடும் கிராமத்தின் இவ்வளவு பெரிய மக்களை நாம் விட்டு வைத்திருக்க முடியாது. அதனால்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே செங்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் தண்ணீர் கிடைக்கும் என்று அறிவித்தேன். இந்த பிரச்சாரத்திற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 100 ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய தொற்றுநோயால் குறுக்கீடுகள் ஏற்பட்ட போதிலும், இந்த பிரச்சாரத்தின் வேகம் குறையவில்லை. இந்த தொடர் முயற்சியின் பலன், 7 தசாப்தங்களில் செய்த பணிகளை, வெறும் 3 ஆண்டுகளில், நாடு இரண்டு மடங்குக்கு மேல் செய்துள்ளது.

தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பதால், அரசின் முயற்சிகளில் பெண்களே முதன்மையாக உள்ளனர். இது பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நீர் நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கை அளிக்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் என்பது வெறும் அரசாங்கத் திட்டம் அல்ல, இது சமூகத்தால், சமூகத்திற்காக நடத்தப்படும் திட்டம்.” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.