தாய்லாந்தில் பாதுகாப்பு கருதி வீட்டுக் காவல் – ஆக. 24-ல் இலங்கை திரும்புகிறார் கோத்தபய

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச (73), ஆகஸ்ட் 24-ம் தேதி கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி கடந்த மே 9-ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். கடந்த ஜூலை 9-ம் தேதிஅதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சிறை பிடித்ததால் அதிபர் கோத்தபய தப்பியோடினார்.

பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இந்த சூழலில் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற கோத்தபய அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். தற்போது அவர்தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக தங்க மட்டுமே கோத்தபயவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிரந்தரமாக தங்க முடியாது என்று தாய்லாந்து அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு கருதி வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் அவரின் நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க கொழும்பில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, “ஆகஸ்ட் 24-ம் தேதி கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவார்” என்று தெரிவித்தார்.

இதை உறுதி செய்யும் வகையில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கோத்த பய ராஜபக்ச நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அதிபர் ரணில் கூறும்போது, “கோத்தபய நாடு திரும்புவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

அமெரிக்காவில் குடியேற முயற்சி

கடந்த 2003-ம் ஆண்டில் கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றார். 2019ல் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார். எனினும் அவரின் மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்க குடிமகனாக அந்த நாட்டில் வசித்து வருகிறார்.

கோத்தபயவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது. கணவர் என்ற வகையில் கோத்தபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு தகுதி உள்ளது. இதற்கான நடைமுறைகளை அமெரிக்காவில் உள்ள அவரது சட்ட நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.