பயோகேஸ் மூலம் `பலே' நன்மைகள்!

இயற்கை விவசாயத்தின் ஒரு அம்சம் தான் பயோகேஸ் எனும் சாண எரிவாயு.. இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் பலரும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பல விதத்தில் நல்ல லாபத்தை தருவது பயோகேஸ் எனும் சாண எரிவாயு ஆகும்.

பயோஎனர்ஜி எனும் உயிர் சக்தி பயன்பாட்டில் கால் நடைகள் கழிவு மிக அதிகமாக சக்தி செறிவு கொண்டுள்ளது, இதற்கு கலன் அமைத்தல் முறையை பார்ப்போம்.

சாணம் சேமிக்கும் முறை

ஒரு விவசாயி இரு மாடுகள் வைத்திருந்தால் அவருக்கு தினசரி 25 கிலோ சாணம் கிடைக்கும் போது அதனை 25 லிட்டர் நீரில் கரைத்தால் போதும். 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான சமையல் கேஸ் கிடைக்கும்.

இதில் என்ன சிறப்பு என்றால் இங்கே கரியும் பிடிக்காது. வாசனையும் வராது, பாத்திரத்தை தேய்த்திட எந்த சோப்பும் தேவையில்லை. குறைந்த நீர் பயன்படுத்தி பராமரிக்கலாம். மேலும், அன்றாட விவசாய செலவை குறைக்கும். சிறுவிவசாயிகள் கூட தனது தோட்டத்திற்கு தேவையான சத்து மிகுந்த இயற்கை எருவாக சாண எரிவாயு உரம் தினசரி 25 கிலோ பெறலாம். அதாவது மாதம் 750 கிலோ வீதம் ஆண்டுக்கு 9 டன் சத்தான உரம் பெற வாய்ப்புள்ளது. இது இரண்டு ஆண்டுகள் வரை உதவுகின்றது.

ஒரு ஏக்கர் பரப்பில் இடும் பயோகேஸ் சாண கழிவு 10 மடங்கு சாணத்தை விட சத்து மிகுந்தது. இதில் அதிக நைட்ரஜன் சத்து உள்ளதால் செடிகள் நல்ல வளர்ச்சி பெறும். பயோகேஸ் இயற்கை உரத்தில் விதைகளை நனைத்து எடுத்த பின் விதைத்தால் அதிக மகசூல் பெறலாம். மேலும், இதன் மூலம் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படுவதால் 40 சதவிதம் கூடுதல் மகசூல் பெறலாம்.

மாடுகள்

ஆம், பண்ணையில் கறக்காத மாடுகள் வயதாகி உள்ள மாடுகளை விற்க தேவையில்லை, அவை நிச்சயம் சாணமும் சிறுநீரும் தரும். சாணத்தை எரிவாயு கலனில் பஞ்சகவ்யா தயாரித்து பயன்படுத்தி நலமான பயிர் வளர்ச்சி பெறலாம். இன்று அதிக விலை கொடுத்து கேஸ்சிலிண்டர் வாங்குகிறோம். நாமே பயோகேஸ் தயாரித்து விற்பனையும் செய்யலாம்.

தனியார் நிறுவனம் மூலமாக தற்போது ஒரு கன அடி கலன் அமைத்து தர சுமார் 1000 செலவாகிறது. இதனை எந்த தோட்டத்திலும் அமைக்கலாம்அருகில் பண்ணைகள் இருந்தால், வாங்கி பயன்படுத்த சாணம் கிடைத்தால் அங்கும் இதனை பயன்படுத்தலாம்.

– முனைவர் .பா.இளங்கோவன்,

வேளாண்மை இணை இயக்குநர்,

காஞ்சிபுரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.