ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்

வலங்கைமான்: குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதக்கமங்கலம் ஊராட்சி மேலராமன் சேத்தி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடவாசல் வட்டம் மேலராமன் சேத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக சீர் செய்த நிலையில் தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும் அச்சத்துடன் தினந்தோறும் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வரும் நிலை உள்ளது. ஆகவே உடனடியாக இடிந்த விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் கோபிநாத் கூறும்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நிலை உள்ளது. இடிந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்க உத்தரவு வந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக மாணவர்கள் பாதுகாப்பை கருதி விரைந்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி குழந்தைகள் அச்சமின்றி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.