இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை ஜோடி சேர்த்த திருவாரூர் திருமணம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அவர்களின் நெருங்கிய உறவினர் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருமண மண்டபத்தில் வாயிலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்

ஆகியோரது புகைப்படங்களும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் படமும், இ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோரின் படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், திருமண அழைப்பிதழிலும் கூட எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் டிஜிட்டல் பேனர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுகவில் யார் தலைமை பொறுப்பிற்கு வருவது என்பதில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் இரு அணிகளாக பிரிந்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தில் முதலில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதன் பின்னர், ஒரு தாய் பிள்ளைகளாக மனக்கசப்புகளை மறந்து சேர்ந்து வாழ்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

அதோடு, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைத்து ஒன்றாக பயணித்தால் தான் அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் ஓபிஎஸ் உடன் சேரும் எண்ணம் இல்லை என்றும் அதிமுகவின் தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டி வரும் நிலையில், எதிரெதிர் துருவங்கள் ஒன்றாக சேர்ந்தது போல் சசிகலாவுக்கு செல்வாக்கு மிகுந்த மன்னார்குடி பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கியுள்ளதால் சுபமுகூர்த்த தினங்கள் தொடர்ந்து வருகிறது. அப்போது கட்சிக்காரர்கள் யார் பக்கம் நின்பது என்பது தெரியாமல் தங்களது வீட்டு விஷேசங்களுக்கு இருவரையும் இணைத்து இதுபோன்று பத்திரிகை அடிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் கருத்து கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.