சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஓர் ஆண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் 17-ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது இன்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக ஆளுநர் துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர்  ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து கலசங்களை கொண்டு சென்று ராஜகோபுரம், மூலவர் சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை எட்டியது. இதனையடுத்து பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபதூப ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.