தகவல்களை சீனாவுக்கு அனுப்பிய கும்பல் கைது| Dinamalar

புதுடில்லி: சீனர்கள் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் , பயனர்களின் முக்கிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக இந்த கும்பலின் நடவடிக்கைகளை கவனித்து வந்த டில்லி போலீசார் அதிரடியாக இறங்கி அவர்களை கைது செய்துள்ளனர். டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த கும்பலை பிடித்தனர். இதற்காக லக்னோவில் கால் சென்டர்களை நடத்தி இந்த கும்பல், சிறிய அளவில் கடன் வழங்குவதாக கூறி மொபைல் செயலிகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த செயலிகளை பயனர்கள் பதிவிறக்கம் செய்ததுடன், அது கேட்கும் அனுமதிகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்த பின்னர், சிறிது நேரத்தில் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

பணம் கேட்டு மிரட்டல்

இதன் பின்னர் இந்த கும்பல், போலி அடையாள அட்டை கொடுத்து வாங்கிய வெவ்வேறு மொபைல் எண்கள் மூலம், கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரித்து படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டுவார்கள். இதனால் பயந்து போகும் அவர்கள், அந்த கும்பல் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு கிடைத்த பணத்தை, வெவ்வேறு வங்கிக்கணக்குகளில் பெற்றனர். அந்த வகையில் ஒவ்வொரு வங்கிக்கணக்குகளிலும் ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மேல் வரவாகி உள்ளது. அந்த பணத்தை ஹவாலா மூலம் சீனாவிற்கு அனுப்பி, கிரிப்போ கரன்சிகளாக வரவு வைத்துள்ளனர்.

கடன் வழங்குவதற்கு என்றே, Cash Port, Rupee Way, Loan Cube, Wow Rupee, Smart Wallet, Giant Wallet, Hi Rupee, Swift Rupee, Walletwin, Fishclub, Yeahcash, Im Loan, Growtree, Magic Balance, Yocash, Fortune Tree, Supercoin, Red Magic. ஆகிய மொபைல் செயலிகளை அந்த கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 51 மொபைல் போன்கள்,2 5 ஹார்டு டிஸ்க்குகள், 9 லேட்பாப்கள், 19 டெபிட் / கிரெடிட் கார்டுகள், 3 கார்கள் மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனர்களுக்காக இந்த மோசடியை செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளது. இதனடிப்படையில் சில சீனர்களை அடையாளம் காணப்பட்டுள்ள போலீசார், அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரூ.500 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ள போலீசார், மோசடி கும்பல் கைது செய்யப்பட்டவுடன், சீனர்கள் தங்களது அலுவலகத்தை பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திற்கு மாற்றி விட்டனர். இவ்வாறு போலீசார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.