ரஷ்ய படைகளை எதிர்கொள்ள 77.5 கோடி டாலர் மதிப்பில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிக்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்காக, உக்ரைனுக்கு மேலும் 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர்தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படைகள் இன்னும் தாக்குதலை தொடர்கின்றன. சுமார் 6 மாதங்களாக இரு நாடுகள் இடையே போர் நீடித்து வருகிறது.

ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே ஆயுத உதவிகளை அளித்துள்ளன. இந்நிலையில் மேலும் 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து 1000 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்ரைனுக்கு 15 ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு டிரோன்கள், 40 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 2000 பீரங்கி எதிர்ப்பு குண்டுகள், ஹோவிட்சர் பீரங்கி களை அமெரிக்கா வழங்கும். இது உக்ரைன் படைகள் தனது பகுதிகளை மீட்கவும், ரஷ்ய ஊடுருவல்காரர்களை எதிர்த்து தாக்கவும் உதவும். உக்ரைன் போர்தொடர்வதால், உக்ரைன் படைகளுக்கு உதவ அமெரிக்கா விரும்புகிறது’’ என்றார்.

அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ‘‘போர்க் களத்தில்எதிர்கொள்ளவும், பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிலையை வலுப்படுத்தவும் இந்த ஆயுத உதவி மிகவும் கவனமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது’’ என்றார்.

உக்ரைன் அதிபர் பாராட்டு

இந்த ஆயுத உதவியை பாராட்டி யுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஊடுருவல்காரர்களை தோற்கடிக்க, மற்றொரு முக்கியமான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்’’ என்றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், 19-வது முறையாக உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களைவழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பீரங்கிகளை தாக்கி அழிக்கும் 1,500 ஏவுகணைகள், 1,000 ஜாவ்லின் ஏவுகணைகளுடன், ரேடார் கருவிகளை தாக்கி அழிக்கும் அதிவேக ‘ஹார்ம்’ ஏவுகணைகளையும் அதிகளவில் அமெரிக்கா அனுப்புகிறது. அத்துடன் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யா எச்சரிக்கை

இந்த ஆயுதங்கள் மூலம் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆயுத உதவிகள் மூலம், ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மேலும் தீவிரப்படுத்துவதாகவும், அமெரிக்காவை போருக்கு இழுக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.