லடாக்கில் சீனாவுக்கு பதிலடி அதிபயங்கர குண்டுவீச்சு விமானம், டிரோன்கள் வாங்க இந்தியா முடிவு: ரஷ்யா, அமெரிக்காவுடன் பேச்சு

புதுடெல்லி: எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக, ரஷ்யாவிடம் இருந்து அதிபயங்கர குண்டு வீச்சு விமானங்களையும், அமெரிக்காவிடம் இருந்து டிரோன்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் 2 ஆண்டுகளுக்கு முன் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்து, அதன் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ற பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது. ராணுவமும் முழுவீச்சில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அதிநவீன ஆயதங்கள், போர் விமானங்கள், போர்தளவாடங்கள் வாங்கியும், சொந்தமாக தயாரித்தும் குவிக்கப்படுகின்றன. விமானப்படைக்கு  பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளன.

இந்நிலையில், விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து டியு-160 என்ற அதி பயங்கர சிறப்பு குண்டுவீச்சு விமானங்களையும், அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9பி ரக தாக்குதல் மற்றும் கண்காணிப்பு டிரோன்களையும் வாங்க, இந்தியா முடிவு செய்துள்ளது. டியு குண்டுவீச்சு விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை ரஷ்யாவிடம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

இந்த ரக போர் விமானங்கள் ஏற்கனவே சீனாவிடம் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்த விமானங்களின் தொழில்நுட்பத்தை கடந்த 1970ம் ஆண்டுகளிலேயே அது பெற்று, தற்போது சொந்தமாக அதிநவீனங்களை புகுத்தி தயாரித்து வருகிறது. தற்போது, அந்த நாடு எச்-6கே என்ற பெயரில் இதை பயன்படுத்துகிறது.  லடாக்  எல்லையில் இவற்றை நிறுத்தி, அச்சுறுத்தியும் வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கவே, முதல் கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து 6  டியு-160 குண்டுவீச்சு விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. ரஷ்யாவில் இந்த விமானங்கள், ‘வெள்ளம் அன்னம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட உள்ள எம்கியூ-9பி தாக்குதல் டிரோன்கள், லடாக் எல்லையிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும்  பயன்படுத்தப்பட உள்ளன. இவை  ரூ.2500 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன. ‘ஹெல்பையர்’ என்ற பயங்கரமான, துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை இவை கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவன் அய்மன் அல் ஜவாஹிரியை கொல்வதற்கு இந்த ஏவுகணையைதான் அமெரிக்கா பயன்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.