ATM-ல் 'ஸ்கிம்மர்' வைத்த மருத்துவ மாணவர் – காவல்துறை விசாரணை

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதனை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். அப்போது அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர்  மற்றும் அவருடைய மகன் ஆனந்த் ஆகிய இருவரும் ஏ.டி.எம். இயந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தியது தெரியவந்தது. தொடர்ந்து மனோகர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில்  வண்ணாரப்பேட்டை பகுதியில் மனோகர், ஜவுளிக்கடை நடத்தி வந்திருக்கிறார். எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மாறாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனோகர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தார்.

அதே வேளையில் அவருடைய மகன் ஆனந்த் அல்பேனியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். மனோகருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆனந்த் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார். டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் உள்ள தொடர்புகள் மூலம் ‘ஸ்கிம்மர்’ கருவி ஆனந்துக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து சென்னை வந்த ஆனந்த், தனது தந்தையுடன் அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தியது தெரியவந்தது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆனந்த் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்ட பின்னரே வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.