ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ஹைடைக் பேருந்து அறிமுகம்… எங்கு தெரியுமா?

நகரமயமாதலின் விளைவாக தனிநபர் மற்றும் பொது போக்குவரத்தி்ன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறத. நாட்டு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு சவாலான விஷயம் என்றால், போக்குவரத்து வாகனங்களுக்கான எரிபொருள் தேவையை சமாளிப்பது மற்றொரு சவாலாக உள்ளது.

நாட்டில் தற்போது இயக்கப்பட்டு வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் டீசலில் அல்லது பெட்ரோலை எரிபொருளாக கொண்டு இயக்கப்படுவதுதான் இதற்கு காரணம்.

போக்குவரத்துக்கான எரிபொருள் தேவையை சமாளிக்க கச்சா எண்ணெய்யை அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளதால், நாட்டின் அந்நிய செலாவணியின் பெரும்பங்கு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே செலவாகி கொண்டிருக்கிறது.

அத்துடன் டீசலில் இயங்கும் பேருந்துகளில் இருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவால் (கார்பன் டை ஆக்சைடு) சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டீசலில் இயங்கும் ஒரு பேருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி நாடு முழுவதும் நாள்தோறும் இயக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பஸ்கள் வெளியேற்றும் கரியமில வாயுவை கணக்கிட்டால், அதனால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பை நாம் எளிதில் உணரலாம்.

இந்த பாதிப்பை கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தற்போது ஒருபடி மேல் சென்று ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து அதன் மூலம் பேருந்தை இயக்கும் உயரிய தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹைடெக் பேருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், புணேவில் இன்று இயக்கி வைக்கப்பட்டது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இப்பேருந்தை இயக்கி வைத்தார். ஹைட்ரஜன் எரிபொருள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதுடன், டீசலை விட இதில் செலவு குறைவு என்பதால், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் எதிர்காலத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.