அடிபம்பு மீது கான்கிரீட் சாலை போட்ட ஒப்பந்ததாரர்! இது நாமக்கல் சம்பவம்! தொடரும் அவலம்

ராசிபுரம் பகுதியில் சாலையில் காங்கிரீட் போடும் பணியின்போது அடிபம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் காங்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரீட் அமைக்கும் ஒப்பந்தப் பணிகளை மதியழகன் என்பவர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
image
இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிபம்பை அகற்றாமல் அலட்சியமாக அதன்மீதே காங்கிரீட் அப்படியே போடப்பட்டுள்ளது. அடிபம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரீட் போடப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டதற்கு ஒப்பந்ததாரர் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது.
image
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த அடிபம்பு மூலம் குடிநீர் எடுத்து வந்தோம். சிறிய கோளாறு ஏற்பட்டபோது அதைச் சரிசெய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இப்போது அதன் மீது கான்கிரீட் சாலையைப் போட்டு விட்டனர். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது வேறு ஒரு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அலட்சியமாக பதிலளித்தார். தண்ணீருக்கு மாற்று ஏற்பாடாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்தனர்.
image
அடிபம்பை அகற்றாமல் அலட்சியமாக அதன்மீதே கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
image
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இதில், சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பங்களை அகற்றி, சாலையோரம் நிறுவும் முன்னரே, மின்கம்பங்களை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்க பணியை முடித்து சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.
image
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெற, உரிமம் புதுப்பிக்க, இருசக்கர நான்கு வாகன பதிவு, பொது வாகனங்கள் தகுதி சான்று பெறவும் வாகனங்களுடன் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இச்சாலை அகலமாக உள்ளது என இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், கவனக்குறைவாக, சாலையின் நடுவே மின் விளக்கு இல்லாத மின்கம்பம் இருப்பதை அறியாமல், சற்று வேகமாக வந்தால் மின் கம்பத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
image
இதில் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் ஆபத்து அதிகம் காரணம். இப்படி சாலையின் நடுவே ஒன்று இரண்டு அல்ல, எட்டு மின் கம்பங்கள் அமைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியாகும். தமிழக அரசு, விரைந்து ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே அமைந்துள்ள எட்டு மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றி, சாலையோரத்தில் அதனை மாற்றி அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.