அதிகரிக்கும் பரவல்: மதுரையில் 81 பேருக்கு டெங்கு பாதிப்பு

மதுரை: மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக கரோனா தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு தொற்று நோயாக இல்லாததால் தொற்று நோயாக பரவிய கரோனாவை ஒழிக்க சுகாதாரத்துறை முக்கியத்துவம் கொடுத்தது. அதனால், கடந்த 2 ஆண்டாக டெங்கு பரவிய போதும் அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் இருந்தது.

தற்போது கரோனா அடங்கியதால் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. டெங்கு காய்ச்சல், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழைக்கால நேரங்களில் பரவி வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் சூழலில் தமிழகத்தில் கோவை, மதுரை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் டெங்கு வேகமெடுக்க தொடங்கியதால் சென்னையில் கடந்த வாரம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளையும் அழைத்து டெங்கு கொசு ஒழிப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், டெங்கு பாதிப்புள்ள வார்டுகளை கண்டறிந்து அந்த வார்டுகளில் அதற்கு முந்தைய கால கட்டங்களுடன் ஒப்பிடும் படியும், அதிகமான பாதிப்பு உள்ள வார்டுகளை ‘ஹாட் ஸ்பாட்’ வார்டுகளாக பட்டியலிட்டு கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து இந்த காய்ச்சலை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

மதுரையில் தற்போது வரை இந்த மழைக்கால சீசனில் 81 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. மதுரை மாவட்டத்தில் கடந்த 2012-13ம் ஆண்டு காலகட்டத்தில் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி, நூற்றுக்கணக்கான நபர்கள் உயிரிழந்தனர். 2017-2018ம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.

இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். அதன்பிறகு அதுபோன்ற பாதிப்பு தற்போது வரை ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் டெங்கு காய்ச்சலையும், அதன் உயிரிழப்புகளையும் நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.

மாநகராட்சி சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”டெங்கு காய்ச்சலை பொறுத்தவரையில் ஏடிஸ் எஜிப்தி (Aedes aegypti) என்ற வகை கொசு பரப்புகிறது. இந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை. அதனால், மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு மாடி, சுற்றியுள்ள காலி இடங்களில் தூக்கி எறியப்படும் தர்மாகோல், பிளாஸ்டிக் டயர், தேங்காய் மட்டையில் செயற்கையாக தேங்கும் நல்ல தண்ணீரில் இந்த கொசுப்புழு அதிகளவு வளர்கிறது.

அதுபோல், வீட்டு உபயோகத்திற்கு ட்ரம், பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரிலும் இந்த கொசுக்கள் வளர்கிறது. அதனால், பாத்திரங்களை மூடி வைத்தால் கொசு முட்டை இடாமல் இருக்கும். பாத்திரங்களை 4 நாட்களுக்கு ஒரு முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வீடுகளுக்கு வரும் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,” என்றார்.

எந்தெந்த இடங்களில் பாதிப்பு?

மதுரை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க 530 டெங்கு ஒழிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், ஆனையூர், அனுப்பானடி, ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த இடங்களில் மக்களை ஜாக்கிரதையாக இருக்க மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.