ஒன்றிய பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்காக கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கும்படி, பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் 54 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக ‘கியூட்’ என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், வெற்றி பெறுவர்கள் மட்டுமே, தரவரிசைப்படி இந்த பல்கலைக் கழகங்களில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான 4ம் கட்டத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த பல்கலைக் கழகங்களில் பொதுத் நுழைவுத் தேர்வுகள் எதுவும் இல்லாமல், வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்காக, தற்போதுள்ள இடங்களை விட கூடுதலாக 25 சதவீத இடங்களை ஏற்படுத்தும்படி, யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதற்கான முடிவு கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக, யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியாவில் நடத்தப்படுவது போன்ற நுழைவுத் தேர்வை நடத்தவில்லை என்றாலும், அதற்கு நிகரான சேர்க்கை விதிமுறைகளை பின்பற்றும்படியும், சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றும்படியும் உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளன. இந்தியாவில் 54 ஒன்றிய, 425 மாநில, 125 நிகர்நிலை, 380 தனியார் பல்கலைக் கழகங்கள் என மொத்தம் 984 பல்கலைக் கழகங்கள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.