சென்னை: திருட்டு வழக்கு; ரூ.2 லட்சம் டீலிங் – போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகினி சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தி.நகரில் உள்ள பிரபலமான ஜூவல்லரி ஷாப்பைச் சேர்ந்தவர்கள், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தனர். அதோடு ஆடியோ பதிவு ஒன்றையும், சி.சி.டி.வி கேமரா பதிவு காட்சிகளையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து அவர்கள் மூன்றுபேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சென்னை தி.நகரில் உள்ள ஜூவல்லரி ஷாப்புக்கு காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து மேலாளரிடம், திருட்டு வழக்கு ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் உங்கள் கடையில் சீல் இருக்கிறது. அதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து ஜூவல்லரியைச் சேர்ந்தவர்கள், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கின்றனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரோகினி விசாரணை நடத்தியிருக்கிறார்.

அதன்பிறகு காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர் ஜூவல்லரி தரப்பினரிடம், `உங்களின் பெயரை எஃப்.ஐ.ஆரில் சேர்க்காமலிருக்க இன்ஸ்பெக்டருக்கு ஒன்றரை லட்சமும் எங்களுக்கு 50,000 ரூபாய் என இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என பேரம் பேசியதாகத் தெரிகிறது. அந்த ஆடியோவை ஜூவல்லரி ஷாப்பைச் சேர்ந்தவர்கள் ரகசியமாக பதிவு செய்திருக்கின்றனர். போலீஸார் கேட்டப் பணத்தை கொடுக்காத ஜூவல்லரி கடையைச் சேர்ந்தவர்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். அதனடிப்படையில்தான் சம்பந்தப்பட்ட மூன்று பேர்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.”

சஸ்பெண்ட்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர்மீது நடவடிக்கை எடுக்க தவறியதே காரணம். இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுபாட்டிலிருக்கும் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.