மதுரை: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – பிறந்த குழந்தை இறந்ததன் மூலம் வெளிவந்த குழந்தை திருமணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியிலுள்ள 28 வயதான உதயக்குமார் என்பவருக்கு14 வயது சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்த சம்பவம், அவர்களுக்கு பிறந்த குழந்தை இறந்தது மூலம் வெளியே தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை

பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை குடும்பத்துக்கு பாரம், செலவு என்று கருதி பெண் குழந்தைகளை கொல்கின்ற கொடூர பழக்கம் இப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தது. எனினும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் அக்கொடிய பழக்கம் மறைந்தாலும், அவ்வப்போது ஒரு சில சம்பவங்கள் நடந்துதான் வருகிறது.

அதுபோல் குழந்தைத் திருமணங்களும் வெளியே தெரியாமல் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இது மேலும் அதிகரித்தது.

காவல்துறை விசாரணை

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியை சேர்ந்த பெரியகருப்பனின் மகன் உதயகுமாருக்கு தேனியை சேர்ந்த தம்பதியின் 14 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சட்ட விரோதமான இந்த குழந்தை திருமணம் வெளியே தெரியாமல் இருக்க போலக்காபட்டியிலுள்ள தோட்டத்து வீட்டிலயே இருவரையும் தங்க வைத்துள்ளனர்.

இக்கொடுமையிலும் கொடுமையாக அக்குழந்தை கர்ப்பமாகியுள்ளார். தனக்கு என்ன நடக்கிறது, உடலிலும் மனதலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியாத அக்குழந்தை 7 மாத கர்ப்பமான நிலையில் நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் உதயகுமாரின் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை திருமணம்

இத்தகவல் எப்படியோ அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

14 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாகவும், அக்குழந்தையை கர்ப்பமாக்கியது தொடர்பாகவும் உதயகுமார் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இக்கொடுமையான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.