நாடு முழுவதும் குண்டும் குழியுமான சாலையால் 2 ஆண்டில் 5,626 பேர் உயிரிழப்பு; ஒன்றிய அமைச்சகம் அதிர்ச்சி தகவல்.!

புதுடெல்லி: நாடு முழுவதும் குண்டும், குழியுமான சாலையால் மட்டும் 2 ஆண்டில் 5,626 பேர் பேர் பலியானதாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பெரும்பாலான சாலை விபத்துகள் அதிவேகம், செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல், குடிபோதையில்  வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் பயன்பாடு, ஓவர் லோடு ஏற்றப்பட்ட  வாகனங்கள், வாகனங்களின் மோசமான நிலை, இரவில் குறைவான வெளிச்சம் போன்ற பல  காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் சிவப்பு விளக்குகளை கடப்பது, வாகனங்களை முந்தி செல்வது, போக்குவரத்து விதிகளை மீறுதல், ஓட்டுநரின் அலட்சியம், சாலை  குண்டும் குழியுமாக இருத்தல், சைக்கிளில் செல்பவர்களால் ஏற்படும் தவறு, பாதசாரிகள் நடந்து செல்லும் போது ஏற்படும்  தவறு போன்றவையும் விபத்துகளுக்கான காரணங்களாகும்.

சமீபத்தில் பேசிய ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படக்கூடிய  இடங்களை அடையாளங்கண்டு, அதை சரிசெய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். குண்டும், குழியுமான சாலைகளை மேம்படுத்த, அதன் வடிவமைப்பு மற்றும் திட்டங்களை வகுத்தலில் புதிய யுக்திகள் கையாளப்படும்’ என்றார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சகத்தின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘குண்டும், குழியுமான சாலையால் ஏற்படும் விபத்துகளால் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2018 முதல் 2020 வரை 5,626 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி 2018ல் 2,015 பேர், 2019ல் 2,140 பேர், 2020ல் 1,471 பேர் இறந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.