கனியாமூர் மாணவி வழக்கு: கைதுகளுக்கான காரணம் என்ன? மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர்  கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 நபர்களின் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி,  வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேர் ஜாமீன் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா  பதிவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்னமும் நீதிமன்ற காவலில் வைத்திருக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் தரப்பில், மாணவியின் உடல் இரண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி மரணமடந்த விஷயத்தில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மனுதாரர்கள் என்ன குற்றம் அவர்கள் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? எதற்காக இவர்கள்  கைது செய்யப்பட்டனர்  என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதி,  விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.