36 மணி நேரத்தில் 15 கொலைகள்; எங்கே போகிறது தமிழகம்? இ.பி.எஸ் ஆவேசம்

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் எங்கே போகிறது தமிழகம்? என்று முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைத்த தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பை திறம்பட கையண்டதாக திமுகவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதே சமயம் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வருகின்றனர். தற்போது அதிமுகவிலும் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே பதவி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், திமுகவினர் குறித்த விமர்சனங்கள் அதிமுக தரப்பில் இருந்து பலமாக வந்த வண்ணம உள்ளது. அந்த வகையில் தற்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் எங்கே போகிறது தமிழகம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்து கூறினேன். ஆனால் குற்றங்களை தடுப்பதில் நிர்வாக திறமையற்ற இந்த முதலமைச்சர் ஆர்வமின்றி விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் கொலை களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது.

கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்று செய்திகள் வருகிறது. இது மக்களை குலை நடுங்க வைத்துள்ளது. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாக தெரியவில்லை முன்விரோதம் காரணமாகவும் திட்டமிட்டு இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கிறன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்களது உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலச்சியமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை பாடியநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக் நண்பர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி கோவிலுக்கு பாதயாத்திரையாக விழுப்புரம் அருகே திண்டிவனம் வந்துகொண்டிருந்தபோது அவரை இரு சக்கரவாகனத்தில் வந்த6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலைக் கொன்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தங்கராஜ மற்றும் உதயகுமார் என்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தங்கராஜ் உதயகுமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் தங்கராஜை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் மரிய பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் ஃபைனான்சியர் மனோகரன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை எஸ் எஸ் காலனி மேலத்தெருவை சேர்ந்த அய்யனார் என்ற மயான காவலாளி, சுத்தியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வணிகவளாகத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபனி சாணியா என்பவர் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட இடத்திலேயே உயிருக்கு போராடி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கட்டிட தொழிலாளி சின்னப்பா என்பர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.   

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே இருவரும் கள்ளக்குறிச்சியில் ஒருவரும் என்று மேலும் மூவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர தமிழகம் முழுவதும் பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆக 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சட்டம் ஒழுங்கை நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தின் சட்டம் ஒருங்கை கவனிக்கும் லட்சனமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.