நடிகர்கள்: மிலி ஆல்காக், மேட் ஸ்மித்
ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
இயக்கம்: மிக்வெல் சப்போச்னிக்
லாஸ் ஏஞ்சல்ஸ்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வெப் தொடர் முடிந்து விட்டதே, இனி அந்த டிராகனை பார்க்க முடியாதா? என ஏங்கியவர்களுக்காகவே அதன் ப்ரீக்வெல் உருவாகி உள்ளது.
ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ் எனும் டைட்டிலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் உருவாவதற்கு 200 ஆண்டுகள் முந்தைய கதையாக இது உருவாகி உள்ளது.
ஹெச்பிஓ தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸின் முதல் எபிசோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள நிலையில், அது எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதை
காதலி டானரிஸ் டார்கரியேன் டிராகன்களின் அரசியையே மக்களுக்காக ஜான் ஸ்னோ கொலை செய்ய ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஷாக்கிங் கிளைமேக்ஸ் ஆக சுமார் 9 ஆண்டுகள் ஓடிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிவுக்கு வந்தது. உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்ட இந்த வெப்சீரிஸின் ப்ரிக்வெலாக வெளியாகி உள்ளது ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ்.
ஆரம்பமே டிராகன்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல டிராகன்களை காட்ட இதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் முதல் காட்சியிலேயே பெரிய டிராகன் ஒன்று பறந்து வந்து அந்த கதை நடக்கும் நகரத்தையும் அரண்மனையையும் நமக்கு சுற்றிக் காட்டும் இடத்திலேயே பிரம்மாண்டம் தொற்றிக் கொள்கிறது. டிராகனில் சவாரி செய்து வரும் அந்த நாட்டின் அரசன் வைசரிஸ் டார்கரியனின் மகள் ரைனிரா (மிலி அல்காக்) டிராகனில் இருந்து இறங்கும் காட்சியிலேயே கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ட்ரீட் கிடைத்து விடுகிறது.
பெண் அரசாள கூடாதா
அரசர் வைசரிஸுக்கு வயதான நிலையில், அடுத்த அரசராக வளர்ந்த மூத்த மகளை ரைனிராவை நியமிப்பதா? அல்லது தம்பி டேமன் (மேட் ஸ்மித்) நியமிப்பதா என்கிற குழப்பத்தில் அரசர் உள்ளார். தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்றும், அவன் தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என தனது மனைவியை அந்த வயதான காலத்திலும் விடாது தொல்லை செய்து கர்ப்பமாக்கி வைத்திருப்பார்.
அறுவை சிகிச்சை இல்லாத காலத்தில்
அறுவை சிகிச்சை எப்படி பல தாய்மார்களின் உயிரை காப்பாற்றி வருகிறது என்கிற காட்சி முதல் எபிசோடை மிஸ் பண்ணாமல் பார்த்து விட வைக்கிறது. (Breach positition) குழந்தையின் உடல் கர்ப்ப வாசல் வழியாக வராமல் போக மருத்துவர்கள் மன்னரிடம் கொடுக்கும் ஆலோசனையும், அதற்கு அவர் எடுக்கும் முடிவும் பதற வைக்கிறது.
நிர்வாண காட்சிகள்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்த ரசிகர்களுக்கு அதில், நிர்வாணக் காட்சிகள் எந்த அளவுக்கு ஒவ்வொரு எபிசோடுகளிலும் நிறைந்திருக்கும் என்பது நன்றாகவே தெரியும். முதல் எபிசோடிலேயே அந்த காட்சிகளின் ரசிகர்களையும் காக்க வைக்காமல் சில நிர்வாணக் காட்சிகளை இயக்குநர் மிக்வல் சப்போச்சனிக் தாராளமாகவே வைத்துள்ளார்.
பிளஸ்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸுக்கு சற்றும் குறையாத பிரம்மாண்ட புரொடக்ஷன் வேல்யூ. முன்னணி நடிகர்களாக நடித்துள்ள மிலி ஆல்காக், மேட் ஸ்மித், பேடி கான்ஸிடைன் போன்றவர்களின் நடிப்பு. முதல் எபிசோடிலேயே டிராகன் மற்றும் அந்த இரும்பு சிம்மாசனத்தை காட்டியது. ஒளிப்பதிவு மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் என அனைத்துமே பலம் தான். முதல் எபிசோடே ஒரு தனிப்படமாக பரபரப்பாக இருப்பது மிகப்பெரிய பிளஸ் தான்.
மைனஸ்
பொன்னியின் செல்வன் முதல் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வரை இதே பதவி பிரச்சனை தான் மையக் கதையாக இருக்கிறதே, வெளியில் இருந்து வரும் பகையை விட குடும்பத்துக்குள்ளே நடக்கும் பகை அரசியல் ஹவுஸ் ஆஃப் தி டிராகனிலும் தொடர்கிறது என்கிற கேள்விகள் மைனஸாக பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது வெறும் ஆரம்பம் தான், இன்னும் போக போக கதை எந்த எந்த பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ் வெப்சீரிஸை பார்த்து வருகின்றனர்.