'மிமிக்கிரி செய்து கலங்கம் ஏற்படுத்துறாங்க' – அண்ணாமலை ஆடியோ விவகாரத்தில் பாஜக புகார் மனு

அண்ணாமலை ஆடியோ விவகாரத்தில் ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
image
இந்நிலையில், அண்ணாமலை மற்றும் மகா சுசீந்திரன் பேசுவது போன்ற ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடந்து கொண்டுள்ளதாகக் கூறி, டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் மற்றும் இந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
image
மேலும் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் கொடுத்துள்ள இந்த மனுவில், தானும் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரே காரில் சென்று கொண்டிருந்தபோது டாக்டர் சரவணன் அண்ணாமலையின் உதவியாளருக்கு போனில் அழைத்து அண்ணாமலையிடம் பேசினார். அப்போது அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் அனுமதி மறுப்பதாகக் கூறிய நிலையில் அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உண்மை தன்மையை மக்களிடம் எடுத்து கூறி பொய்யான முத்திரையை காட்டி வேற லெவல் அரசியல் செய்வோம் என டாக்டர் சரவணனிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் தானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சிவகங்கைக்கு அவரை அனுப்பி வைத்தோம். ஆகவே சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது.
மேலும் அண்ணாமலையுடன் தான் எந்த இடத்திலும் போனில் பேசவில்லை. மேற்படி நடந்த உரையாடலை டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறு பரப்பும் வகையில் கட்டிங் எடிட்டிங், மிமிக்கிரி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
image
எனவே பாஜக மாநில தலைவர் உதவியாளர், டாக்டர் சரவணன், மற்றும் தனது செல்போன் எண்களை முழுமையாக ஆய்வு செய்து, டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.