மதுரை: கஞ்சா ஒழிப்பில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணனைப் போல திமுக அரசு தூங்குகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அவருடன் கிளைக் கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; ”மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கிராமத்து பழமொழி போல, ஓ.பன்னீர்செல்வம் குழப்பமான மனநிலையில், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.
முதல்வர் பதவி மீதும், தலைவர் பதவி மீதும் ஆசை இல்லை என்று கூறுகிறார், அப்படி என்றால் உரிமையில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மறுபடியும் உயர் நீதிமன்றம் சென்று மனு தாக்கல் செய்தது ஏன்? ஓபிஎஸ் வழக்கு தொடுப்பது மூலம் தொண்டர்கள் மிகவும் மன வேதனையையும், கடுமையான மன உளைச்சலில் உள்ளனர்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை, கொச்சைப்படுத்தும் விதமாக குண்டர்கள் என்று பேசுகிறார், ஓபிஎஸ் தனது கருத்துக்களால் தொண்டர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர், அவர் கருத்துக்களை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது,
தொண்டர்களின் கோயிலாக உள்ள தலைமைக் கழகத்தை, யார் குண்டர்களுடன் வந்து சர்வநாசம் செய்தது என்று அனைவருக்கும் தெரியும், பொதுக் குழுக் கூட்டத்தில் எந்த சலசலப்பும் கிடையாது, நடைபெற்ற பொதுக்குழுவில் ராணுவக் கட்டுப்பாடுடன் கழகத்தினர் இருந்தனர்.
தற்பொழுது பருவ மழை பெய்து வருகிறது, மேட்டூரில் ஒரு லட்சத்து 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, மக்களுக்கு உரிய விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும், கடந்த மாதம் பெய்த மழையால் நீரில் சிக்கி சிலர் மரணம் அடைந்துள்ளனர், ஆகவே உரிய வழிகாட்டுதலை அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும்,
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது, ஆனால் தமிழகத்தில் சுதந்திரமாக காவல்துறை செயல்படுவதற்கு அரசு முன்வருமா? பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன, இது மிகவும் அபாயமான சூழ்நிலையாக உள்ளது, முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் காவல்துறை மானிய கோரிக்கையில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை குறித்து இரண்டரை மணிநேரம் அவல நிலையை விளக்கி பேசினார், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி குறித்தும், போதைபொருட்கள் அதிகரித்து வருவதை அரசுக்கு கூறுகிறார், ஆனால் தமிழக அரசு கும்பகர்ணனை போல் தூங்குகிறது.” இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.