சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது.
அதன் மூலம் எமக்கு அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதுடன், பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் படிப்படியாக மேம்படுத்த முடியும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணிக்குழு மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்து, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதில் இந்த கடன் வசதிகள் மிக முக்கியமானது. அதிகாரி மட்டத்திலான உடன்பாட்டைத் தொடர்ந்து, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில், கடன் நிலைத்தன்மையை பெற்றுக்கொள்வதற்கு உதவும் .சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அனுமதியைப்; பெறுவதற்கு உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், அப்போது இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளர்களிடமிருந்து கடன் பெற வாய்ப்புக்கள் இருக்கும் என்றும் பிரதமர் விளக்கினார்.
இது ஒரு ஆரம்பம் மட்டும் தான். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.