மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் இன்று (05) முதல் எந்தவொரு இலத்திரனியல் அட்டையினூடாகவும் செலுத்த முடியும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) திருமதி டி. குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொழிநுட்பத்தின் முன்னேற்றத்துடன் இன்றைய இளம் தலைமுறையினர் எப்போதும் பணத்தை விட இலத்திரனியல் அட்டைகளினூடாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர். எனவே மக்களுக்கு உயரிய சேவை வழங்கும் நோக்குடனும், மக்கள் சிரமமின்றி இலகுவாக கட்டணங்களை செலுத்துவதற்காக வேண்டியும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (கட்டுப்பாடு) சுசந்த ஜயதிலக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாராஹேன்பிட்ட மற்றும் வேரஹெர ஆகிய கிளைகளில் மாத்திரமே இந்த அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த முடியும். எதிர்காலத்தில், இத்திட்டத்தை ஏனைய கிளைகளுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்த்திருக்கின்றோம். அத்துடன், ஒன்லைன் ஊடாகவும் இந்த சேவையை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் ஒன்றாகும். இதனூடாக மாதாந்தம் சுமார் 350-400 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், மாத வருமானம் சுமார் ஒரு பில்லியன் ரூபாவாக இருந்தது என்றும் திணைக்களத்தின் கணக்காளர் (வருமானம்) அரவிந்த சமரகோன் தெரிவித்தார்.