பெங்களூருவில் மக்கள் கடும் தவிப்பு 3வது நாளாக வடியாத மழைநீர்: மேலும் 10 நாட்கள் மழை நீடிக்கும் என எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் 3வது நாளாக நேற்றும் மழைநீர் வடியாததால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. பெங்களூரு மாநகரில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் மொத்த பரப்பளவில் 50 சதவீதம் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. ஐடி காரிடார், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் ஹப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.  ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய பெரும்பாலான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. 3 நாளாகி நேற்றும் வெள்ளம் வடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை நேற்று அதிகாலை 4 மணி வரை பெய்தது. ஒரே இரவில் மட்டும் 109 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காங்க், துபாய், கோலாலம்பூர், ஆம்ஸ்டர்டாம், டோக்கியோ, கத்தார் நாடுகளில் இருந்து விமானங்கள் 25 முதல் 60 நிமிடங்கள் வரை தாமதமாக இறங்கியது.

சர்வதேச விமானங்களாக பாரிஸ் நாட்டில் இருந்து வந்த ஏர் பிரான்ஸ் மற்றும் பிராங்போர்ட்டில் இருந்து வந்த லுப்தான்ஸ் ஆகிய இரு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லி, மும்பை, புனேவில் இருந்து வந்த இண்டிகோ மற்றும் கோ பாஸ்ட் விமானங்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், 10 நாட்கள் தொடர்ந்து மழை இருக்கும் என்பதால் பெங்களூரு ஐடி நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் 17 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை அகற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

* காங்கிரஸ் காரணம்
முதல்வர் பொம்மை கூறுகையில்,  ‘பெங்களூரு மாநகரின் பழைய ஆவணங்களில் பதிவாகியுள்ள விவரம் படி, கடந்த 1932ம் ஆண்டு மாநகரில் அதிகம் மழை பெய்துள்ளது. மாநகரில் கடந்த 90 ஆண்டுகளுக்கு பின் பேய் மழை பெய்துள்ளது.  பல இடங்களில் ஏரிகள் ஆக்கிரமித்து குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியில்லாமல், மக்கள் குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ஏரிகள் ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த தவறு தான், தற்போது மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு காரணம். மழை நீர் செல்ல முடியாமல் தடுக்கும் வகையில் கால்வாய்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

* டிராக்டர்களில் மீட்பு
பெங்களூரு வெள்ளத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் மூழ்கி உள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை டிராக்டர் மூலம் மீட்டு வருகின்றனர். பணிபுரியும் இடங்களில் சிக்கிய மக்கள் பலரும் டிராக்டர்கள் மூலமாக தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

* இளம்பெண் பலி
இதற்கிடையில், ஒயிட்பீல்டு பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஐடி பெண் ஊழியர் ஸ்கூட்டியில் சென்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த போது அருகில் இருந்த மின்சார பெட்டியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்ததால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. உடனே அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு  அழைத்துசென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே இறந்துவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.