வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குகிறது ரஷியா- அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன்,

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்துள்ள ரஷியா ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறையால் தவிப்பதாக சொல்லப்படுகிறது. ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி ரஷியா பயன்படுத்தியது. ஆனால் இந்த டிரோன்களில் தொழில்நுட்ப கோளாறுகளை ரஷியா எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் உக்ரைன் போருக்காக வட கொரியாவிடம் இருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கும் நடவடிக்கையில் ரஷியா இறங்கி உள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவின் பக்கம் ரஷியா திரும்பி இருப்பது உண்மைதான். உக்ரைன் போரினால் ஆயுதங்கள், தளவாடங்கள் தட்டுப்பாட்டினால் ரஷியா தத்தளிக்கிறது” என தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் வட கொரியாவிடம் இருந்து ரஷியா ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்கும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடித போக்குவரத்து நடந்துள்ளது. இந்த கடிதங்களில் விரிவான, மூலோபாய, தந்திர உபாய ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.