கொரோனா காலத்தில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை திட்டம் நிறுத்தம்?…30ம் தேதியுடன் காலாவதி ஆவதால் திடீர் சிக்கல்

புதுடெல்லி: கொரோனா காலத்தில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை திட்டம் வரும் 30ம் தேதியுடன் காலாவதி ஆவதால், அத்திட்டம் நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை ஒரு நபருக்கு 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் இம்மாதம் 30ம் தேதியுடன் காலாவதியாகிறது. இருப்பினும், இத்திட்டம் ெதாடர்ந்து நீட்டிக்கப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது கேள்வியாக உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான தானிய கையிருப்பு இந்திய உணவு கழகத்திடம் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

கோதுமை, அரிசி உள்ளிட்ட தானிய வகைகள் கடந்த 1ம் தேதி நிலவரப்படி 4.92 கோடி டன் அளவிற்கு இருப்பு இருந்தது. அவை வரும் அக்டோபர் 1ம் தேதிக்குள் 3.2 கோடி டன்னாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணக்கின்படி, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க, 2.38 கோடி டன் உணவு தானியங்கள் தேவைப்படும். அதாவது அக்டோபர் 1ம் தேதிக்குள் இருக்க வேண்டிய மொத்த தானிய கையிருப்பு 3.2 கோடி டன் ஆகும்.

அதற்காக மொத்த தானியத்தில் 2.38 கோடி டன்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். அப்போது இந்திய உணவு கழகத்திடம் 82 லட்சம் டன் தானிய கையிருப்பு மட்டுமே இருக்கும். இருப்பினும், இந்திய உணவு கழகத்திடம் குறைந்தபட்சம் 37 மில்லியன் டன் தானியங்களை சேமிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமானால் ரூ.75,000 கோடி தேவைப்படும். எனவே இத்திட்டத்தை தொடர்வது குறித்த முடிவை ஒன்றிய அரசு இதுவரை எடுக்கவில்லை.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது கடந்த உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றிக் கைக்கொடுத்தது. அடுத்த ஓரிரு மாதங்களில் குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல், அதற்கடுத்து கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு மேலும் நீடிக்குமா? இல்லையா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்துவிடும். மேலும் பல மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையால் தவித்து வருவதால் ஒன்றிய அரசு இலவச அரிசி, கோதுமை திட்டத்தை நிறுத்தினால் பெரும் நிதிச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.