நாட்டிலேயே முதல்முறையாக… சிறைக் கைதிகளுக்கு இப்படியொரு அசத்தல் திட்டம்!

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள், அவர்களின் நன்னடத்தையில் அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை செய்யப்படும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது.

சுதந்திர தினம், தலைவர்களின் பிறந்த நாள் போன்ற சிறப்புமிக்க தினங்களில் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அதுவரை சிறையில் இருக்கும் தண்டனைக் காலத்தில் வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தமது நெருங்கிய உறவினர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் வாடும் கைதிகளுக்கு நூதனமாக ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கைதிகளின் நன்னடத்தை அடிபபடையில் சிறை வளாகத்துக்குள்ளேயே அவர்கள் தமது மனைவி அல்லது கணவருடன் தனிமையில் நேரம் செலவிட அனுமதி அளிக்கும் புதிய திட்டம் வரும் 27 ஆம் தேதி முதல் (செப்.27) அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி, சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஆணோ, பெண்ணோ, குறிப்பிட்ட ஒரு நாளில் சிறையில் வளாகத்தில் குளியலறையுடன்கூடிய தனி அறையில், தங்களது வாழ்க்கை துணையுடன் இரண்டு ம்ணி நேரம் தனிமையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே அளிக்கப்பட உள்ள இந்த சலுகையை கைதிகள் பயன்படுத்தி கொள்வதற்கு முன்பாக, அவர்கள் தங்களுக்கு எச்ஐவி மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று பஞ்சாப் மாநில சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் திருமண பந்தத்துக்கு மதி்ப்பளிக்கும் விதத்திலும், அவர்களின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தையை அதிகரிக்கும் நோக்கிலும் புதுமையான இந்தத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக தெரிவித்துள்ள சிறைத் துறை அதிகாரிகள், நன்னடத்தை கைதிகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை அளிக்கப்படுமம் எனவும், கொலை, பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.