பசுமை, மீள் திறன், பாதுகாப்பு: 5,904 ச.கி.மீ கொண்ட சென்னை பெருநகருக்கு புதிய போக்குவரத்து திட்டம்

சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதை விரிவாக்கம் செய்து 5904 சதுர கிலோ மீட்டராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னைப் பெருநகர் போக்குவரத்து திட்டம் (COMPREHENSIVE MOBILITY PLAN ) கடந்த 2019-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது.

தற்போது பெருநகர் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இதைப் புதுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

  • பசுமை: இந்தப் போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையில் இருக்கும். மேலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
  • மீள்திறன்: மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்தத் தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் (Resilient) வகையில் இருக்கும்.
  • அனைவருக்கும்: இந்தப் போக்குவரத்து திட்டம் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இருக்கும். நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும்.
  • சிறந்த செயல்பாடு: புதிய போக்குவரத்துத் திட்டம் சிறந்த முறையில் செயல்படும் வகையில் இருக்கும்.
  • பாதுகாப்பு: சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும்.
  • புதிய முயற்சி: புதிய முயற்சிகள் கொண்ட போக்குவரத்துத் திட்டமாக இருக்கும்.

இவ்வாறு இந்த 6 பிரிவுகளை உள்ளடக்கிய போக்குவரத்துத் திட்டமாக புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.