மெக்சிகோ நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்..! – உயிரிழப்பு சம்பவத்தால் அதிர்ச்சி ..!

மெக்சிகோ நாட்டில் கடந்த சில நாட்கள் முன்னதாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடந்த 19ம் தேதியன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.

இதன் அடிப்படையில் மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அகுய்லிலா பகுதிக்கு தென்மேற்கே சுமார் 46 கி.மீ தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மெக்சிகோ மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.