தென் ஆப்பிரிக்க அணியின் 5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்தது – ரோகித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்-கேப்டன் பவுமா களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா (டக் அவுட்) ஆட்டமிழந்தார். அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார். அந்த ஓவரில் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றி அர்ஷ்தீப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது. ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த ஐடன் மார்க்ரம். ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசையில் பார்னெல்- கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் இந்திய அணியின் அசத்தல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன்கள் (33 பந்துகள்), ராகுல் 51 ரன்கள் (56 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ;

விக்கெட் கடினமாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். கடினமான சூழ்நிலையில் அணி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அப்படி ஒரு விளையாட்டை விளையாடியது நன்றாக இருந்தது.

இரு அணிகளும் மோதும் போட்டியில் சிறப்பாக விளையாடிய அணி வெற்றி பெற்றது. நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், விரைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளைப் பெற்றோம், அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான சரியான காட்சி.என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.