இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு – குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

குஜராத்தின் அம்பாஜி நகரில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”இந்த பண்டிகை காலத்தில் எனது சகோதரிகளுக்கு உதவ, அரசாங்கம் அதன் இலவச ரேசன் திட்டத்தை நீட்டிக்கிறது” என அறிவித்தார். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இக்கட்டான காலங்களில் நிவாரணம் வழங்க மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில், இதுவரை நாட்டில் 3 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி ஏழைகளுக்கு வழங்கியுள்ளோம். இதில் பெரும்பாலான வீடுகள் பெண்களுக்கு சொந்தமானவை.எனது சொந்த மாநிலத்திற்குச் வருவதற்கு இது ஒரு நல்ல நேரம். நவராத்திரியின் போது அம்பாஜியில் இருப்பது அதிர்ஷ்டம். 

இங்கு தொடங்கப்படும் திட்டங்கள் இப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, நாட்டின் வடமேற்கு பிராந்தியத்தின் சித்திரம் முற்றிலும் மாறியுள்ளது. இந்த பகுதியின் நிலைமையை மாற்றியதில் நீர், சுஜலாம்-சுபலாம், நர்மதா சொட்டு நீர் பாசனம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. இதன், பங்களிப்பிலும் பெண்களின் பங்கு அதிகமுள்ளது. 

பெண்களுக்கான மரியாதை என்று பேசும்போது, ​​அது நமக்கு மிகவும் சாதரணமாக தோன்றும். ஆனால் அது குறித்து தீவிரமாகச் சிந்திக்கும்போது, ​​நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எவ்வளவு மரியாதை பொதிந்துள்ளது என்பதை நாம் அறிய முடியும். நம் இந்தியாவை ஒரு தாயாகப் பார்க்கிறோம். பாரத தாயின் குழந்தைகள் நாம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். 

இந்த வந்தே பாரத் ரயில் மூலம், பக்தர்கள் எளிதாக அம்பாஜி நகருக்கு வர இயலும். பிரசித்தி பெற்ற அம்பாஜி கோயில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.