திடீரென மூடப்படும் நூற்றாண்டுகால அரசு கல்லார் பழப்பண்ணை.! அதிர்ச்சியில் மக்கள்!

யானைகளின் வலசை பாதையில் அமைந்துள்ளதால் சென்னை உயர்மன்றதின் உத்தரவின் பேரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கல்லார் பழப்பண்ணையை மூட எடுக்கப்படும் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னுமிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப்பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும் மண்வளமும் மிகுத்த இப்பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது இப்பழப்பண்ணை. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இப்பழப்பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷின நிலை நிலவுவதால் உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் உள்ளன.
மேலும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம் பஞ்சு மரங்கள், காணவும் கிடைக்கவும் அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டி கிடக்கின்றன.
image
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு முதல் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைசிறந்த தாவரவியல் ஆர்வலர்கள் வரை இங்கு வந்து சென்றுள்ளனர். இவை மட்டுமின்றி பசுமை மாறா இப்பகுதியில் முகாமிட ஆண்டுதோறும் பல்வகை பட்டாம்பூச்சிகள் பல்லாயிரக்கணக்கில் குவிவது வழக்கம். இதனால் வண்ணத்துபூச்சி ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் இங்கு வந்தே தங்களது பதிவுகளை துவக்குகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 291 வகை பட்டாம்பூச்சி இனங்களில் கல்லார் பழப்பண்ண பகுதியில் மட்டுமே 152 வகை பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் யானைகள் போலவே பட்டாம்பூச்சிகளும் ஆண்டுதோறும் வலசை செல்லும் வழக்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை எழில் மிகுத்த இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங்கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக்கள் விற்பனை, பழச்சாறு மற்றும் ஜாம் விற்பனை, குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா என பல்வேறு வசதிகள் உள்ளதால் விடுமறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தே காணப்படும்.
image
வனம் சார்ந்த பகுதி என்பதால் இங்கு விளையும் பழங்களை உண்ண குரங்கு, மான், மயில் உள்ளிட்ட ஏராளமான பறவையினங்கள் வந்தாலும் அவ்வப்போது யானைகளின் வருகையும் இருக்கும் என்பதால் தோட்டத்தை சுற்றி சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து கண்டிப்பான நடவடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இது குறித்த ஆய்விற்காக கடந்த 10.4.22 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய குழுவினர் கல்லார் வருகை தந்தனர்.
image
யானைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ள கல்லார்-ஜக்கனாரி பீட் பகுதியில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் உடன் நேரில் ஆய்வு நடத்திய நீதிபதிகள் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்தனர். இதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 122 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லார் பழப்பண்ணை மூடப்படுகிறது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “கல்லார் பழப்பண்ணை மூடப்படும் என்றும் இதற்கு மாற்றாக சிறுமுகை பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு பழப்பண்ணை அமைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
image
என்ன இருந்தாலும் இயந்திரவியல் அதிசயமாக கருதப்படும் நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலையில் பாரம்பரிய சின்னமாக கருதப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பல்வேறு தனி சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள பழமையான கல்லார் பழப்பண்ணயும் காக்கப்பட வேண்டிய இயற்கைவியல் அதிசயமே.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.