'நான் விளையாட்டாக பேசினேன்… தவறாக புரிந்துகொள்ளப்பட்டது' – அமைச்சர் பொன்முடி

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 30) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. 

இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு சென்று சேர வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 153. பொறியியல் சேவை மையங்களுக்கு சென்று சேர வேண்டியவர்கள் 5 ஆயிரத்து 16 பேராகும். மேல்நோக்கி நகர்வுக்காக 4 ஆயிரத்து 289 மாணவர்கள் காத்திருக்கின்றனர். 

3ஆவது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும். பொயியியல் கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெறும். பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும். வரும் 8ஆம் தேதி முதல், அதன் கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். நான்கு கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. 

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். ஓசி பேருந்து  என பேசிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு,”விளையாட்டாக பேசியதை  இவ்வளவு பெரிதுப்படுத்த வேண்டிய தேவையில்லை. கீழே மக்கள் பேசியதை நான் கலோக்கியலாக (பேச்சுநடையில்) பேசியதை தவறாக புரிந்து கொண்டனர்” என விளக்கமளித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.