ஜாதகத்தில் சிறை செல்லும் யோகம் இருக்கிறதா? உத்தராகண்ட் சிறையில் ஒரு நாள் தங்கி தோஷத்தைப் போக்கலாம்!

ஒருவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், அவருக்குப் பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. அப்படியான பிரச்னைகள் நீங்கிட ஜோதிடர்கள் குறிப்பிட்ட பரிகாரங்களைச் சொல்லிச் செய்யச் சொல்வார்கள். ஜாதக கிரகநிலைகளின்படி ஆயுள் கண்டம், கடன் பிரச்னைகள், இழப்புகள், அவமானங்கள் முதலான பிரச்னைகள் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பரிகாரங்கள் சொல்லப்படுவது வழக்கம். ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல், நவகிரக ப்ரீதி, ஹோம வழிபாடுகள் என்பதாகப் பரிகார விஷயங்கள் சொல்லப்படுவது உண்டு.

சிறை செல்லும் தோஷம் நீங்குமாம்!

இந்த வகையில் காராகிரஹ தோஷம் என்றும் ஒன்றைச் சொல்வது உண்டு. அதாவது சிறை செல்லும் சூழல் உருவாக நேரிடும் என்பார்கள். இப்படியான சிறை செல்லும் தோஷத்தைப் போக்கவே புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது உத்தராகண்ட் மாநில அரசு!

சிறை தண்டனை

ஒருவருக்கு சிறை செல்லும் நிலை இருந்தால், தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்வது பரிகாரமாகும். அதனால் வழக்குகள், பிரச்னைகள் சார்ந்து சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றொரு நம்பிக்கை உண்டு. அந்த வகையிலேயே சிறை தோஷத்தைப் போக்க மாநிலத்தில் உள்ள சிறைகள் வாடகைக்கு விடப்படும் என்று அறிவித்திருக்கிறதாம் உத்தராகண்ட் அரசு.

தோஷ பரிகாரமாக மட்டுமன்றி சிறையைப் பார்க்கவேண்டும் என்றோ அல்லது ஒரு நாள் சிறைவாசத்தை அனுபவிக்க நினைப்பவர்களும்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமாம்!

ஒருநாள் கட்டணம் 500 ரூபாய்!

ஒரு நாள் சிறையில் தங்கிக்கொள்ள ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் ஹல்டுவானி சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறையில் தங்கவேண்டும் என்று வருபவர்களுக்குத் தனி அறை ஒதுக்கப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சிறையில் தங்கினால் எதிர்காலத்தில் சிறைக்கு செல்லவேண்டும் என்று இருக்கக்கூடிய சிறை யோகம் நீங்கிவிடும் என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, பலரும் சிறைக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குச் சிறையில் முதலில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சிறை நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

சிறை

இது போன்று சிறை வாடகைக்கு விடப்படுவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு சிறைச் சுற்றுலா முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி சிறையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் சிறையில் சில மணி நேரம் தங்களது துணையுடன் தனி அறையில் தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.