புதுச்சேரி: “இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்” – மின்தடை விவகாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலமும் இருளில் மூழ்கியது. மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமயில், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, காவல்துறை டி.ஜி.பி மனோஜ்குமார் லால், மின்துறை செயலர் அருண் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் ஆலோசனை

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், “அரசு கொள்கை முடிவெடுத்து மின்துறையை தனியார்மயமாக்ககுவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்நிலையில் மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சி செய்தும், அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. கடந்த சில நாள்களாக மின்துறை ஊழியர்கள் மின் தடையை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும் அரசு அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, சரி செய்து மக்களுக்கு மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலையில் மின்துறை ஊழியர்கள், வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மின் ஒயர்களை துண்டித்திருக்கின்றனர். அத்துடன் பீஸ் கட்டைகளையும் கையுடன் பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர். இதனை உடனடியாக சரி செய்யும் பொருட்டு முதல்வர், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து தடைபட்ட மின்சாரத்தை உடனடியாக கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மக்கள் தயவு செய்து அமைதி காக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்ற வகையில் அத்துமீறி நடந்து கொண்ட மின்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும். மக்களுக்கு தீங்கு செய்கின்ற, தொல்லை தருகின்ற இத்தகைய செயலை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. தொடர்ந்து மின்தடை ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் மின்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மாற்று ஏற்பாடாக மத்திய மின் மையத்திலிருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்கள் துணை மின் நிலையங்களில் அமைர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

தொடர்ந்து அத்துமீறி, பொதுமக்களுக்கு இடையூறு தருகின்ற வகையில் நடக்கின்ற மின்துறை ஊழியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கைது செய்வதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், எந்த போராட்டத்தை வேண்டுமானாலும் மின்துறை ஊழியர்கள் நடத்தலாம், உரிமையை கேட்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு அவர்கள் இடையூறு செய்வதை எதிர்கட்சிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் அனுமதிக்கின்றார்களா? பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்ற மின்துறை ஊழியர்களுக்கு எந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்கட்சிகளும் ஆதரவு தர வேண்டாம். ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் அரசியல் செய்ய வேண்டாம்” என்றார். மேலும் நிலைமையை கட்டுக்குள் வைக்க துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.