புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு! – மின்துறை ஊழியர்கள் போராட்டத்தால் மக்கள் கடும் அவதி

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்திவருகிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

ஆனால் காங்கிரஸ் ஆட்சி முடிந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அது தொடர்பாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர் போராட்டக்குழுவினர். அதன்படி பிப்ரவரி 1-ம் தேதி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

சாலை மறியலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன்

அதையடுத்து அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அப்போது நிறுத்தினர்.  அதையடுத்து கடந்த மே மாதம் அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

அதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, மே 23-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அப்போதும் அரசு பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 27-ம் தேதி மின்துறை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் மின் ஊழியர்கள் 28-ம் தேதி முதல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட சுயேச்சை எம்,எல்.ஏக்கள் நேரு மற்றும் பிரகாஷ்குமார்

அதன் எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பல பகுதிகளில் மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். குறிப்பாக 16 துணை மின் நிலையங்களில் மின்சாரத்தை துண்டித்ததுடன், பீஸ் கட்டைகளையும் மின்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் ஒரே நேரத்தில் இருளில் மூழ்கியது.

நான்கு மணி நேரத்தை தாண்டியும் மின் வெட்டு நீடிப்பதால், அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார்2 கிலோமீட்டர்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. உருளையன்பேட்டை மற்றும் முத்தியால்பேட்டை தொகுதிகளின் சுயேச்சை எம்.எல்.ஏக்களான நேரு மற்றும் பிரகாஷ்குமார் இருவரும் தீப்பந்தங்களுடன் தலைமை செயலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல லாஸ்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ வைத்தியநாதன் பொதுமக்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அதனால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புதுச்சேரி – திண்டிவனம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.