இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

புதுச்சேரியில் வேலைநிறுத்தம் செய்து வரும் மின்துறை ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டித்ததால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டு புதுவை மக்கள் தவித்துப் போயினர். மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, மின்துறை ஊழியர்கள் நேற்று 4 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் மாலையில் வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மின்சார வயர்களையும் துண்டித்தனர். இதனால் ஊரே இருளில் மூழ்கியதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி தீப்பந்தங்களைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
image
இதனிடையே, தலைமைச்செயலர், டிஜிபி ஆகியோருடன் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். தடைபட்ட மின்சாரத்தை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 மணி நேரத்துக்குப் பிறகு மின்வெட்டு சீரானது.
எனினும் காரைக்காலில் இரவு நேரமாகியும் மின் விநியோகம் சீரமைக்கப்படாததை கண்டித்து, நிரவி, மதகடி, டி.ஆர். பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நிலைமையை சமாளிக்க 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
image
மத்திய அரசின் பவர்கிரிட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளதாகவும், மின்வினியோகம் செய்யும் இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் போராட்டங்களிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.